கிருஷ்ணகிரி, ஏப்.12:மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்குவதன் மூலம் இந்தியாவில் புதிய பொருளாதாரத்தை உருவாக்குவோம் என்று கிருஷ்ணகிரி பொதுக்கூட்டத்தில் ராகுல் உறுதி அளித்தார்.

விவசாயத்திற்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்து விவசாயிகளுக்கு என்னென்ன செய்யப்போகிறோம் என்பதை முன்கூட்டியே அறிவித்து செயல்படுவோம் என்று அவர் கூறினார்.

கிருஷ்ணகிரியில் இன்று காலை நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு காங்கிரஸ் வேட்பாளர் செல்லகுமார், ஓசூர் திமுக வேட்பாளர் சத்யன் ஆகியோரை ஆதரித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த கூட்டத்திற்கு திரளாக வந்துள்ள காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணிகட்சிகளின் தொண்டர்களை நான் வரவேற்கிறேன். இந்தியா என்பது பல்வேறு மொழி,கலாச்சாரம், இனத்தை கொண்ட ஒரு நாடு. அதில் தமிழ் கலாச்சாரம், தமிழ் மொழி என்பது முக்கியமானதாகும்.

தமிழ் மக்களின் குரல் இப்போது பலமாக ஒலிக்கவில்லை. அவர்களது குரல் பிரதமர் மோடிக்கு கேட்கவில்லை. அவர் வெறுப்பு அரசியலை நடத்துகிறார். நாங்கள் அன்பு, மரியாதை, மதிப்பு ஆகியவற்றை பின்பற்றி அரசியல் நடத்துகிறோம்.

மோடி அரசு 15 பேர்களை கையில் வைத்து கொண்டு ஆட்சி நடத்துகிறது. அவர்களது பெயர் எனக்கு தெரியும். நிரவ் மோடி, அனில் அம்பானி, விஜய் மல்லையா போன்றவர்கள் அவர்கள். டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். அவர்களை பார்க்க மோடி மறுத்து விட்டார். விவசாயிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சிக்கு முக்கியமானதாகும்.

பணமதிப்பு நடவடிக்கை மூலம் உங்கள் பணத்தை மோடி பறித்து விட்டார். ஏழை மக்கள் தங்கள் பணத்தை பெறுவதற்கு வெயிலிலும் காத்து கிடந்தார்கள். ஜிஎஸ்டி வரி மூலம் வளமான தமிழகத்தை மோடி கொள்ளையடித்து விட்டார்.

திருப்பூரில் ஜவுளி தொழில் பாதிக்கப்பட்டு விட்டது. பட்டு நகரமான காஞ்சிபுரம் அழிக்கப்பட்டு விட்டது. லட்சக்கணக்கானோர் வேலை இழந்தார்கள். வேலை இல்லாத இளைஞர்களுக்கு பதில் அளிக்க மோடியால் முடியவில்லை. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். வேலை இழந்தவர்கள் மீண்டும் வேலைபெறுவார்கள்.

பஞ்சாயத்து முதல் நகரங்கள் வரை பணியிடங்கள் நிரப்பாமல் உள்ளன. பஞ்சாயத்தில் மட்டும் 10 லட்சம் பணியிடம் காலியாக கிடக்கிறது. நாங்கள் இவற்றிற்கு பணியாளர்களை நியமிப்போம்.

காவிரி டெல்டா மாவட்டங்கள் அதிமுக ஆட்சியில் அழிக்கப் படுகின்றன. கஜா புயலில் அழிந்ததை விட பெரிய அழிவை இந்த மாவட்டங்கள் சந்தித்து வருகின்றன.

விவசாயிகள் வேலை இழந்து வருகிறார்கள். காங்கிரஸ் ஆட்சியில் விவசாயத்திற்கும், ரெயில்வேக்கும் தனி பட்ஜெட் போடுவோம். வேளாண்மைக்கு என்னென்ன செய்யப்போகிறோம் என்பதை முன்கூட்டியே அறிவிப்போம். இதை பின்பற்றி விவசாயிகள் சாகுபடி செய்ய முடியும். ஆனால் பிஜேபி ஆட்சியில் ரெயில்வேக்கு இருந்த தனி பட்ஜெட்டை தடுத்து விட்டார்கள்.

நாட்டில் ஒவ்வொருவருக்கும் ரூ.15 லட்சம் கிடைக்கும் வகையில் கருப்பு பணம் ஒழிக்கப்படும் என்று மோடி கூறினார். அதை அவர் செய்தாரா என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 20 சதவீதம் ஏழை குடும்பத்தினருக்கு வங்கி கணக்கில் ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் போடுவோம் என உறுதி அளித்திருக்கிறோம்.

ஒருநாள் என் வீட்டிற்கு சில ஏழைகள் வந்தார்கள். அவர்களிடம் மாதம் உங்களுக்கு எவ்வளவு வழங்கினால் வறுமை ஒழியும் என கேட்டு இந்த தொகையை நான் முடிவு செய்தேன். நாம் வழங்கும் இந்த பணத்தின் மூலம் ஏழை மக்கள், காலணிகள், ஆடைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்குவார்கள். இதன் மூலம் வர்த்தகம் அதிகரிக்கும். நாட்டில் புதிய பொருளாதாரம் ஏற்படும்.
தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும். அதற்கு நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.
தமிழக மக்கள் ஆதரவுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்பார். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வரவேற்று பேசினார். காங்கிரஸ் வேட்பாளர்களும், நிர்வாகிகளும் ராகுலுக்கு பொன்னாடை அணிவித்தனர்.

கிருஷ்ணகிரி கூட்டத்தை முடித்து கொண்டு ஹெலிகாப்டரில் ராகுல் சேலம் சென்றார். அங்கு சேலம் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் பார்த்திபனை ஆதரித்து பேசினார். இந்த கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலினும் உரையாற்றினார்.