சென்னை, ஏப்.15: தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற உள்ள வரும் வியாழக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
சென்னையில் மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் வாக்குப்பதிவு வரும் 18-ந் தேதி நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை இடைவிடாமல் வாக்காளர்கள் வாக்கு செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மதுரையில் மட்டும் கூடுதலாக 2 மணி நேரம் அனுமதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் நிறைவடைகிறது. குறிப்பிட்ட நேரத்திற்குள் தலைவர்கள் தங்கள் பிரச்சாரங்களை நிறுத்தி கொள்ள வேண்டும்.
நட்சத்திர பிரச்சாரகர்கள் அனைவரும் அதற்கு பின் தொகுதியில் இருக்கக்கூடாது. வரும் 19-ந் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ள தொகுதிகளிலும் 16,17 ஆகிய தேதிகளில் பிரச்சாரம் செய்யக்கூடாது.
கருத்து கணிப்புகளை வெளியிடவும் தடைவிதிக்கப்படுகிறது. கணிப்புகளை தொலைக்காட்சியில் வெளியிடுவதோ, பத்திரிகைகளில் பிரசுரிப்பதோ குற்றமாக கருதப்படும். இவ்வாறு அவர் கூறினார்.