திருத்தணி ஏப். 15: தமிழ்புத்தாண்டை முன்னிட்டு திருத்தணி முருகன் கோயிலில் 1008 பக்தர்கள் பால் குடம் எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செய்து முருகனுக்குசிறப்பு அபிஷேகம் நடத்தினர்.

நந்தி ஆற்றங்கரையில் எழுந்தருளியுள்ள கோட்டா ஆறுமுக சுவாமி ஆலயத்தில் இருந்து பக்தர்கள் பால் குடங்களை சுமந்து ஊர்வலமாக மலைக் கோயில் சென்றடைந்தனர். முன்னதாக இங்குள்ள மூலவருக்கு அபிஷேகம், பூஜைகள் நடத்தி மங்கள வாத்தியங்கள் முழங்க 1008 பால் குடங்கள் சுமந்தவாறு பக்தர்களின் ஊர்வலம் திருத்தணி முக்கிய வீதிகளின் வழியாக புறப்பட்டு சென்றது.

மலைக் கோயில் காவடி மண்டபத்தில் வள்ளி-தெய்வயானை சமேதரராய் வீற்றிருந்த உற்சவர் சுப்பிரமண்ய சுவாமிக்கு பால் அபிஷேகம் நடத்தி தீபாராதனை செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தமிழ்புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை முதலே சுவாமியை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிப் பட்டனர். மூலவர் கடவுளுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தி தங்க கவசம், வைர கிரீடம், பச்சைக்கல் மரகத மாலை அணிவிக்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.