கிருஷ்ணகிரி, ஏப்.15: திமுக தலைமையிலான கூட்டணி குழப்பம் நிறைந்த பொருந்தா கூட்டணி என்றும், சந்தர்ப்பவாத கூட்டணி என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

கிருஷ்ணகிரி மக்களவை தொகுதி வேட்பாளர் கே.பி.முனுசாமி, ஓசூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஜோதி பாலகிருஷ்ணா ரெட்டி ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் செய்த அவர் பேசியதாவது:- மத்தியில் நிலையான, வலிமையான அரசு அமைய வேண்டும் என்பதற்காக அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு தேர்தலை சந்திக்கிறது.

இந்த கூட்டணி மக்கள் நலன் சார்ந்த கூட்டணி தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் கூட்டணி. ஆனால் தி.மு.க. தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணி ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி, குழப்பம் நிறைந்த கூட்டணி. ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். ஆனால் காங்கிரஸ் கட்சியில் உள்ள ப.சிதம்பரம் நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்குப்பிறகு யார் பிரதமர் என்பதை முடிவு செய்வோம் எனக் கூறுகிறார். இப்படி முரண்பட்ட கருத்துடைய கூட்டணியால் நிலையான, உறுதியான ஆட்சியை எப்படி தரமுடியும்? ஆனால் இந்தியா முழுவதும் மாநிலக் கட்சிகளுடன் பிஜேபி கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்த கூட்டணி வெற்றி பெற்றால் நரேந்திர மோடி தான் பிரதமர் என அனைத்துக்கட்சிகளும் அறிவித்து மக்களிடத்திலே வாக்குகள் கேட்டு வருகின்றனர். நரேந்திரமோடி ஒருவரால் மட்டும் தான் ஒரு நிலையான ஆட்சியை தரமுடியும்.
தி.மு.க. கூட்டணியில் வைகோ கட்சியும் உள்ளது.

இந்த கட்சியின் வேட்பாளர் ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. கட்சி சின்னத்தில் போட்டியிடுகிறார். அதாவது ஒருவர் ஒரு கட்சியின் சின்னத்தில் போட்டியிடுகிறார் என்றால் அவர் அந்த கட்சியில் இணைந்து போட்டியிடுகிறார் என்பது தான் அர்த்தம். இதுபற்றி வைகோ என்ன சொல்லப்போகிறார். அதே போன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி இரண்டு தொகுதியில் போட்டியிடுகிறது ஒரு தொகுதியில் தனி சின்னத்திலும், மற்றொரு தொகுதியில் தி.மு.க. கட்சி சின்னத்திலும் போட்டியிடுகிறது.

இந்த இரட்டை நிலைப்பாடு ஏன்? தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கட்சியின் கொள்கையை விட்டுத்தரக்கூடாது. ஆனால் சில கட்சிகள் கூட்டணிக்காகவும், தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவும், கொள்கையை விட்டுக்கொடுத்து கூட்டணி அமைக்கிறார்கள். இந்த கூட்டணி ஒரு குழப்பமான கூட்டணியாகத்தான் இருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் எதிரணியினர் குழப்பத்தில் தான் உள்ளனர்.