காஞ்சிபுரம், ஏப்.15: போலீசாரை அவர்களின் பணியை செய்ய விடாமல் தடுத்ததாக கூறி, காஞ்சிபுரம் திமுக எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள, அதிமுக-திமுக ஆகிய இருக்கட்சிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டிருந்துள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் (தனி) நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து, உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்ய தேரடி பகுதிக்கு வந்திருந்தார்.

இதேபோல், அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து பிரச்சாரம் செய்ய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தேரடி பகுதிக்கு வந்திருந்தார். இதனால், பாதுகாப்பு கருதி, உடனடி நடவடிக்கையாக திமுக பிரச்சாரம் மேற்கொள்ள தற்காலிகமாக அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த திமுகவினர், காவல்துறையின் செயலை கண்டித்து, காஞ்சிபுரம் எம்.எல்.ஏ. எழிலரசன் (திமுக) தலைமையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.  தகவலறிந்துவந்த டி.எஸ்.பி. பாலசுப்பிரமணியம், விஷ்ணுகாஞ்சி இன்ஸ்பெக்டர் சுரேஷ் சண்முகம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், கலைந்து செல்ல மறுத்ததையடுத்து, இருதரப்பிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து, போலீசாரை அவர்களின் பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், அவர்களை தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் கூறி, எழிலரசன் எம்.எல்.ஏ.மீது காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.