சென்னை, ஏப்.15:மகளின் திருமண ஏற்பாடுகளை கவனிக்க 6 மாதம் பரோலில் செல்ல அனுமதி வழங்க கேட்டும், இவ்வழக்கில் தானே நேரில் ஆஜராகி வாதிட அனுமதி கோரியும் நளினி முருகன் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக வேலூர் சிறையில் 27 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வரும் நளினி, லண்டனில் வசிக்கும் தன் மகள் ஹரிதாவின் திருமண ஏற்பாடுகளை கவனிக்க ஆறு மாதங்கள் பரோலில் செல்ல அனுமதி வழங்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை, 2000ம் ஆண்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட பின், இதுவரை, 10 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்த 3,700 ஆயுள் கைதிகளை தமிழக அரசு விடுதலை செய்துள்ளது.

ஆயுள் கைதிகளுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு மாதம் பரோல் வழங்க சிறை விதிகள் உள்ளது. ஆனாலும், 27 ஆண்டுகளாக தனக்கு பரோல் வழங்கப்பட
வில்லை.

லண்டனில் இருக்கும் தனது மகள் ஹரிதாவுக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதை, அம்மா என்ற முறையில் அருகிலிருந்து கவனிக்க, 6 மாதம் பரோலில் செல்ல அனுமதிக்க வேண்டும்.

மேலும், இந்த மனு மீதான விசாரணைக்கு தானே நேரில் ஆஜராகி வாதிட அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.இந்த மனு நீதிபதிகள், எம். சத்திய நாராயணன், எம். நிர்மல்குமார் ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் அய்யப்பராஜ், இம்மனு குறித்து பதில்தர அவகாசம் வேண்டும் என்று தெரிவித்தார்.இதையடுத்து, மனுதாரரின் கோரிக்கை குறித்து பதில் தர அரசு தரப்புக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, ஜூன் 11 ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர். அதேநேரத்தில், அவசரமாக பரோல் வேண்டுமென்றால், விடுமுறை கால நீதிமன்றத்தை அணுகும்படி நளினிக்கு, நீதிபதிகள் அறிவுறுத்தினர்.