புதுடெல்லி, ஏப்.15:பிரதமர் நரேந்திர மோடியை திருடன் என்று விமர்சித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் விளக்கம் கேட்டு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. பிரான்ஸ் நாட்டிலிருந்து ரபேல் விமானங்கள் வாங்கியது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி மத்திய அரசு தாக்கல செய்துள்ள மனுவை அண்மையில் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த தீர்ப்பு வெளியானதும் ரபேல் வழக்கில் மோடியை உச்சநீதிமன்றம் திருடன் என்று கூறியிருப்பதாக ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் குறிப்பிட்டார். இது நீதிமன்ற அவமதிப்பாகும். எனவே, அவர் மீது வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று உச்சநீதிமன்றத்தில் பிஜேபி கட்சியைச் சேர்ந்த மீனாட்சி லேகி என்ற எம்பி மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இதற்கு விளக்கம் அளிக்க வேண்டுமென்று ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. அத்துடன் விசாரணையை வரும் 22-ந் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

ஏற்கனவே, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும், ராகுலை இது தொடர்பாக விமர்சித்திருந்தார். கோர்ட் உத்தரவு என்ன என்பதை முழுமையாக படிக்காமல் ராகுல் காந்தி கருத்து கூறியிருப்பது கண்டனத்திற்குரியது என்று நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார்.