சென்னை, ஏப்.15:மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத் தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைய ஒரே நாளே உள்ளதால், தலைவர்கள் இன்று இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடும் வெயிலையும் பொருட்படுத்தா மல் வேட்பாளர்களும் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட தேர்தல் கடந்த 11-ந் தேதி 91 தொகுதிகளில் நடந்து முடிந்தது. 2-ம் கட்ட தேர்தல் 97 தொகுதிகளில் வரும் வியாழக்கிழமை நடைபெற உள்ளது.

தமிழகத்திலும், புதுச்சேரியிலும் இந்த 2-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதனுடன் தமிழகத்தில் காலியாக இருந்த 18 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

தற்போதுள்ள மோடி அரசு தொடருமா? அல்லது மாற்றம் ஏற்படுமா? என்ற வகையில் இந்த தேர்தல் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதே சமயம் தமிழகத்தில் 18 தொகுதி இடைத்தேர்தலும் மிகுந்த முக்கியத் துவத்தை பெற்றுள்ளது. அதனால், தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் மற்ற மாநிலங்களை காட்டிலும் தீவிரமாக நடந்து வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடி சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தமிழகத்தின் பல்வேறு தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். பிஜேபி தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இரண்டு முறை தமிழகம் வந்து பல தொகுதிகளில் பிரச்சாரத்தை மேற் கொண்டார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல் வம் ஆகியோர் கடந்த ஒரு மாத காலமாக தொகுதி வாரியாக சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.

பாமக நிறுவனர் ராமதாஸ், தேமுதிக பொருளாளர் பிரேமலதா, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோரும் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளனர்.
திமுக தரப்பில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், கடந்த ஒரு மாத காலமாக இடைவிடாமல் பிரச்சாரம் செய்து வருகிறார். திமுக கூட்டணியில் மதிமுக பொதுச்செய லாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அமமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் துணைப் பொதுச்செய லாளர் டிடிவி தினகரனும் வாக்கு சேகரித்து வருகிறார். இதேபோல தனித்துப் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹா சன் ஆகியோர் தங்களது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.

கடும் வெயிலையும் பொருட்படுத் தாமல் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட் டுள்ள தலைவர்கள் இன்று இறுதிக் கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் மக்களவை தொகுதியிலும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல் வம் தேனி மக்களவை தொகுதியிலும் இரவு, பகலாக வாக்கு சேகரித்தனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மத்திய சென்னையில் ஓட்டு வேட்டையாடுகிறார். பாமக நிறுவனர் ராமதாஸ் தர்மபுரியிலும், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நாகை, தஞ்சா வூர் தொகுதிகளிலும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர்.