புதுச்சேரி, ஏப்.16: புதுவையில் தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த மாநிலம் முழுவதும் 4 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதுவை மக்களவை மற்றும் தட்டாஞ்சாவடி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் நாளை மறுநாள் நடக்கிறது. தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கவும் அரசியல் கட்சியினர் பணம் வினியோகம் செய்வதை கட்டுப்படுத்தவும் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
பதட்டம் நிறைந்த 14 தொகுதிகள் கண்டறியப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.

புதுவை மாநிலம் முழுவதும் இன்று மாலை 6 மணி முதல் வருகிற 19-ந்தேதி காலை 6 மணி வரை 4 நாட்கள் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் 5-க்கும் மேற்பட்டோர் பொதுஇடங்களில் கும்பலாக நிற்கக்கூடாது. விளம்பர பதாதைகள், துண்டறிக்கைகள், ஆயுதம் போன்றவை வைத்திருக்கக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

இறுதிக்கட்ட பிரச்சாரம்

இதற்கிடையே புதுவையில் அரசியல் கட்சிகள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டன. புதுவை மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் வைத்திலிங்கத்தை ஆதரித்து மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது. முதலமைச்சர் நாராயணசாமி,அமைச்சர்கள், மற்றும் கூட்டணி கட்சியினர் இந்த ஊர்வலத்தை மரப்பாலம் அருகே கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

அதிமுக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் டாக்டர் நாராயணசாமியை ஆதரித்தும், இருசக்கர வாகனப்பேரணி நடைபெற்றது. இதனை என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, எதிர்க்கட்சி தலைவர் அன்பழகன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் துவக்கி வைத்தனர்.