தஞ்சை,ஏப். 16: தஞ்சை பெரியகோவில் அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனுறை பெருவுடையார் திருக்கோவில் சித்திரைத் திருவிழா கடந்த 2ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

முக்கியத் திருவிழாவான தேரோட்டத் தை இன்று தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். முன்னதாக அதிகாலை பெரிய கோவிலிலிருந்து ஸ்ரீவிநாயகர், ஸ்ரீவள்ளி தெய்வானை, ஸ்ரீசுப்ரமணியர், ஸ்ரீசண்டிகேஸ்வரர், ஸ்ரீநீலோத்பலாம்பாள், ஸ்ரீதியாகராஜர், ஸ்கந்தர், ஸ்ரீகமலாம்பாள் ஆகிய சுவாமிகள் முத்துமணி அலங்கார சப்பரத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெற்று தேரடியை வந்தடைந்தது.

தேரினுள் அருள்மிகு ஸ்ரீதியாகராஜர்- கமலாம்பிகை அம்மன் அலங்காரத்துடன் வீற்றிருக்க பூஜைகள் செய்யப்பட்டு தேரோட்டம் துவங்கியது. இத்தேர் மேலராஜவீதியில் தொடங்கி வடக்கு ராஜவீதி, கீழராஜவீதி, தெற்கு ராஜவீதி வழியாக தேர்நிலைக்கு வந்தடையும். திரளானப் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.