தருமபுரி, ஏப்.16: திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தன் இன்று அமமுக தருமபுரி வேட்பாளர் பழனியப்பனை சந்தித்து அக்கட்சிக்கு ஆதரவு தெரிவித்தார்.

திமுகவில் ஒரு காலத்தில் வலுவான தலைவராக இருந்தவர் முல்லைவேந்தன். அவர் கருணாநிதி அமைச்சரவையில் இரு முறை அமைச்சராக இருந்துள்ளார்.
அடிப்படையில் அதிமுகவைச் சேர்ந்த முல்லைவேந்தன், திமுகவில் சேர்ந்த பின்பு அமைச்சர் அளவுக்கு உயர்ந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்குசரியானஅளவுக்கு வாய்ப்பு வழங்கப்படாததால் திமுகவில் இருந்து விலகி தேமுதிகவில்
சேர்ந்தார். பின்னர் அங்கிருந்தும் விலகி அதிமுகவில் சேர்ந்தார்.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் மீண்டும் திமுகவில் இணைந்தார். இந்த மக்களவை தேர்தலில் அவருக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்ற வருத்தத்தில் முல்லைவேந்தன் இருந்து வந்தார். மேலும் பாப்பிரெட்டி பட்டி இடைத்தேர்தலில் தனக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்த்ததாக கூறப்படுகிறது.

ஆனால் அவருக்கு எந்த பொறுப்பும் வழங்கப்படாததுடன் தேர்தலில் போட்டியிடவும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த முல்லைவேந்தன் சில தினங்களுக்கு முன்பு தருமபுரி தொகுதியில் பாமக வேட்பாளராக போட்டியிடும் அன்புமணி ராமதாசை சந்தித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்தார்.

இந்த நிலையில், முல்லை வேந்தன் திடீரென டிடிவி தினகரனின் அமமுக வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பனை இன்று சந்தித்து அவருக்கு ஆதரவு அளித்தார்.