சென்னை, ஏப்.8: சென்னை-சேலம் இடையேயான எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக பிறப்பித்த அரசாணை செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.

சென்னையிலிருந்து சேலத்திற்கு 3 மணி நேரத்தில் செல்லும் வகையில் பசுமை வழிச்சாலை என்ற பெயரில் எட்டு வழிச் சாலையை அமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம் வகுத்தது. இந்த திட்டத்திற்காக ரூ.10 ஆயிரம் கோடி செலவிட மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. சுமார் 277 கிலோமீட்டர் தூரத்திற்கு அமைக்க திட்டமிடப்பட்ட இந்த 8 வழி  சாலைக்கு சேலம், தருமபுரி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களில் இருந்து 1,900 ஹெக்டர் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.
இந்நிலையில் இந்த திட்டத்துக்கு தடை விதிக்க கோரியும், திட்டத்தை ரத்து செய்யக் கோரியும் வக்கீல்கள் ஏ.பி.சூரியப்பிரகாசம், வி.பாலு, விவசாயி கிருஷ்ணமூர்த்தி உள்பட 50க்கும் மேற்பட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். தருமபுரி எம்.பி. டாக்டர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலர் தனித் தனியாக வழக்கு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்குகளை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது. இந்த திட்டத்திற்காக 5 மாவட்டங்களிலும் நிலங்களை கையகப்படுத்த இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையின் போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயன், இந்த திட்டத்திற்கு மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் ஒப்புதல் வழங்கவில்லை என்றால், திட்டத்தை தொடர மாட்டோம் என்று உத்தரவாதம் அளித்தார். தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல், விதிகளுக்கு உட்பட்டே நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெறுகிறது என்று வாதிட்டார்.

இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் இன்று தீர்ப்பளித்தனர்.  அந்த தீர்ப்பில், இந்த வழக்கில், 18 கேள்விகளை முன் வைத்து இந்த கோர்ட்டு ஆராய்ந்தது. சென்னை- சேலம் எட்டு வழிச் சாலை திட்டத்திற்காக, நிலம் கையகப்படுத்த பிறப்பிக்கப்பட்ட அரசாணை செல்லாது. இந்த அறிவிப்புபடி, 5 மாவட்டங்களில் விளை நிலங்கள் உள்பட நிலத்தை ஆர்ஜிதம் செய்ய எடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது.
இந்த திட்டத்துக்காக, வருவாய் ஆவணங்களில் மாற்றம் செய்யப்பட்டதை, எட்டு வாரத்திற்குள் திருத்தம் செய்து, மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும். சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் திட்டத்துக்கு நிலத்தை ஆர்ஜிதம் செய்ய பிறப்பித்த அறிவிப்பு சட்டத்திற்கு புறம்பானது.

நிலம் ஆர்ஜிதம் சட்டத்தில் சொல்லப்பட்ட நடைமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை. சுற்றுச்சூழல் அனுமதி பெற்ற பின்னர்தான், இந்த திட்டத்தையே செயல்படுத்த முடியும்.
அந்த வகையில் இந்த திட்டத் துக்காக, நிலத்தை அடையாளம் கண்டது, நிலத்தில் இருந்தோரை அகற்றியது அனைத்தும் தவறான நடவடிக்கையாகும்.
ஆகவே, சேலம்- சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு நிலம் ஆர்ஜிதம் செய்ய பிறப்பித்த அரசாணை செல்லாது. அது ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவித்து உள்ளனர்.