சென்னை, ஏப்.17:வேலூர் மக்களவை தொகுதியில் தேர்தலை ரத்து செய்து ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென்று அதிமுக சார்பில் இன்று மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

பணப்பட்டுவாடா செய்த வேட்பா ளரை போட்டியிட அனுமதிக்க வேண்டுமா? என்று நீதிபதிகள் சரமாரி கேள்விகள் எழுப்பினார்கள். வேலூர் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளரும், திமுக பொருளாளர் துரைமுருகனின் மகனுமான கதிர் ஆனந்து போட்டியி டுகிறார். அவருடைய கல்லூரி, வீடு மற்றும் சிமெண்ட் கிடங்கில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில் 11 கோடியே 48 லட்ச ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

கட்டுக்கட்டாக கைப்பற்றப்பட்ட பணம் வாக்காளர்களுக்கு வழங்கப்பட இருந்தது என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், உறவினர் பூஞ்சாலை சீனிவாசன், தாமோதரன் உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். வருமான வரித்துறை சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து, தலைமை தேர்தல் ஆணையம் வேலூர் மக்களவை தொகுதி தேர்தலை ரத்து செய்யக்கோரி ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையை ஏற்று ஜனாதிபதி நேற்று உத்தரவு பிறப்பித்திருந்தார்.

தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் மற்றும் சுயேட்சை வேட்பாளர் சுகுமாறன் ஆகியோர் சென்னை உயர்
நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அவர்களின் மனுக்களில், தேர்தல் அறிவித்தபின் தேர்தல் நடவடிக்கைகளில் தலையிட குடியரசு தலைவருக்கு அதிகாரம் இல்லை எனவும், தேர்தலை நடத்தவும் கண்காணிக்கவும் ஆணையத்துக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முறைகேடுகளில் ஈடுபடும் வேட்பாளர்களை மட்டுமே தகுதி
நீக்கம் செய்ய குடியரசு தலைவருக்கு அதிகாரம் உள்ளதாகவும், தேர்தலை ரத்து செய்வதற்கு அதிகாரம் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டம் ஒழுங்கு பிரச்சினை மற்றும் இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டால் மட்டுமே தேர்தலை ரத்து செய்யவோ தள்ளிவைக்கவோ முடியும் என்றும் தெரிவிக்கபட்டுள்ளது. பிற வேட்பாளர்களின் கருத்துக்களை கேட்காமல் அவர்களையும் தண்டிக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் தேர்தலை நடத்த செய்யப்பட்ட செலவு வீணாகிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலை ரத்து செய்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும், அந்த உத்தரவை ரத்து செய்து வேலூர் தொகுதிக்கு தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் ஏ.சி. சண்முகம் சார்பில் மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன் ஆஜராகி வாதிட்டார். மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி, தேர்தல் நடைமுறைகள் தொடங்கிவிட்டால், தேர்தல் ஆணையம் தவிர, மற்றவர்கள் யாரும் தலையிட முடியாது. தேர்தலை ரத்து செய்ய குடியரசு தலைவருக்கு அதிகாரம் இல்லை. வேட்பாளர் முறைகேட்டில் ஈடுபட்டால், அவர் தேர்தலில் போட்டியிட முடியாமல் தடுக்க வேண்டுமே தவிர, ஒட்டுமொத்தமாக அந்த தொகுதிக்கான தேர்தலை ரத்து செய்யக் கூடாது என்று வாதிட்டார்.

அதற்கு நீதிபதிகள்,‘தேர்தலை ரத்து செய்யக்கூடாது என்றால், பணப்பட்டுவாடா முறைகேட்டில் ஈடுபடுபவர்களை தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டுமா? தேர்தலில் வெற்றி பெற்றவர்களைத்தான் தகுதி நீக்கம் செய்ய முடியும். தேர்தலில் போட்டியிடுபவர்களை எப்படி தகுதி நீக்கம் செய்ய முடியும்? பணப்பட்டுவாடா விவகாரத்தில் குறிப்பிட்ட சில வேட்பாளர்களை மட்டும் தேர்தலில் போட்டியிட தகுதி நீக்கம் செய்ய முடியும்?’ என்று கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து, சுயேட்சை வேட்பாளர் சுகுமாறன் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல். சுந்தரேசன் ஆஜராகி வாதிட்டார். வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்றது.