தூத்துக்குடி, ஏப்.17:பொய் தகவல் அடிப்படையில் என் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடத்தி உள்ளது. என் வெற்றியை பிஜேபியால் தட்டிப்பறிக்க முடியாது என்று கனிமொழி கூறினார்.

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் கனிமொழி தூத்துக்குடியில் உள்ள குறிஞ்சி நகரில் தங்கி உள்ளார். இந்த வீட்டில் நேற்று இரவு 8 மணி முதல் 10.30 மணி வரை வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த தகவல் அறிந்ததும் கனிமொழி வீட்டின் முன் ஏராளமான திமுகவினர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து கனிமொழி கூறுகையில், வருமான வரித்துறையினர் என் வீட்டில் நடத்திய சோதனை ஜனநாயக விரோதமானது. திட்டமிட்டு வேண்டுமென்றோ பொய்த்தகவல் அடிப்படையில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். சோதனையின் முடிவில் ஒன்றும் கிடைக்கவில்லை என்று அவர்களே கூறிவிட்டு சென்றனர்.

வருமான வரித்துறையின் இந்த நடவடிக்கைக்கு நான் முழு ஒத்துழைப்பு வழங்கினேன். ஆனால் பிஜேபியால் என் வெற்றியை தட்டிப்பறிக்க முடியாது என்றார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், எதிர் கட்சி தலைவர்களுக்கு எதிராக மத்திய ஏஜென்சிகள் அனைத்தும் பயன்படுத்தப்படுகின்றன. தோல்வி பயத்தால் சோதனை நடத்துகிறார்கள். பிஜேபி வேட்பாளர் தமிழிசையின் வீட்டிலும் கோடி, கோடியாக பணம் உள்ளது. அங்கு சோதனை நடத்தாது ஏன்? என்று கேள்வி விடுத்தார்.