எதிர்க்கட்சி பற்றி மட்டும் எப்படி துப்பு கிடைக்கிறது? ப.சிதம்பரம்

சென்னை தமிழ்நாடு

சென்னை, ஏப்.17: தமிழகத்தில் வருமானவரித் துறைக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் வீடுகளை பற்றி மட்டும் எப்படி துப்பு கிடைக்கிறது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நாளை ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயற்சிப்பதாக தகவல் பரவுவதால், வருமானவரித்துறையினர், தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

வேலூர் தொகுதியில் நடை பெற்ற வருமான வரித்துறை சோதனையில் பெருமளவு பணம் கைப்பற்றப்பட்டதால், அந்த தொகுதியின் மக்களவை தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்த சூழலில், நேற்று ஆண்டிப்பட்டியில் உள்ள அமமுக அலுவலகத்தில் வருமானவரித்துறை  சோதனை நடத்தியது. இந்த சோதனையில் ரூ.1.48 கோடி கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. அதேபோல், தூத்துக் குடியில் அந்த தொகுதியின் திமுக வேட்பாளர் கனிமொழி தங்கியிருந்த வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.

இந்த நிலையில், வருமான வரித்துறை சோதனைகள் குறித்து முன்னாள் நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.  சிதம்பரம் தனது டுவிட்டரில் இது பற்றி கூறியிருப்பதாவது:-
2019 தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலின் அடையாளமே வருமானவரித் துறையின் எதேச்சாதிகார பாரபட்சமான நடவடிக்கைகளே, கனிமொழியின் இருப்பிடத்தில் வருமானவரி சோதனை, எதுவும் கிடைக்கவில்லை என்பது செய்தி. எதிர்க்கட்சித் தலைவர்களைப் பற்றி மட்டுமே ‘துப்பு’ கிடைக்கிறது?.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.