சென்னை, ஏப்.18: திரையுலக நட்சத்திரங்களான நடிகர் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, பிரபு, குஷ்வு ஆகியோர் காலையிலேயே தங்கள் பகுதிகளில் தங்கள் வாக்கினை பதிவு செய்து ஜனநாயக கடமையை ஆற்றினர்.

தமிழகத்தில் 38 மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பொதுமக்களும், பிரபலங்களும் காலை முதலே தங்கள் ஜனநாயகக் கடமையை ஆர்வத்துடன் நிறைவேற்றி வருகின்றனர்.

திரை நட்சத்திரங்களான நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் திருவான்மியூரில் உள்ள பள்ளியில் வாக்களித்தனர். நடிகர் விஜய் நீலாங்கரையில் உள்ள பள்ளியில் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார். நடிகர் கமல்ஹாசன் தனது மகள் சுருதிஹாசனுடன் தேனாம்பேட்டையில் உள்ள பள்ளியில் வாக்கினை பதிவு செய்தார். முன்னதாக கமல் வாக்குப்பதிவு செய்த பள்ளியில் வாக்குப்பதிவு எந்திரம் பழுதடைந்ததால், காத்திருந்து தனது ஓட்டை பதிவு செய்துவிட்டு சென்றார்.

நடிகர் பிரபு அவரது மனைவி மற்றும் மகன் விக்ரம் பிரபு தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.