சென்னை, ஏப்.20: பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு அட்டவணை குறித்து இன்று மாலையில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியிருக்கிறார்.முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் நடத்திய ஆலோசனைக்கு பின்னர் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளன. 91 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இதையடுத்து பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு வரை இந்த கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வந்தது. இந்த கல்வி ஆண்டு முதல் அண்ணா பல்கலைக்கழகம் இந்த பொறுப்பிலிருந்து விலகிக் கொள்வதாகவும், தொழில் நுட்பக் கல்வி இயக்குனரகம் கலந்தாய்வை நடத்தும் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வை தொழில் நுட்பக் கல்வி இயக்குனரகம் நடத்துவது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனி
சாமி, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுடன் ஆலோசனை நடத்தினார். சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்குச் சென்ற உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பொறியியல் கலந்தாய்வு அட்டவணை வெளியிடுவது தொடர்பாக முதலமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

அப்போது தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உயர்கல்வித்துறை செயலாளர் மங்கத் ராம்சர்மா, தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் விவேகானந்தன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். பொறியியல் கலந்தாய்வு தேதி, அட்டவணை உள்ளிட்ட அனைத்து விவரங்களும் மாலை செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்படும் என அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார். கலந்தாய்வை நடத்துவதற்கு தொழில்நுட்ப வல்லுனர்களைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்படும் என்று தெரிகிறது.
அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் எம்.கே.சூரப்பா கடந்த பிப்ரவரி மாதம் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழு தலைவர் பொறுப்பிலிருந்து விலகினார்.

அவர் ராஜினாமாவைத் தொடர்ந்து மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வு நடத்தும் பொறுப்பு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 22 ஆண்டுகளாக அண்ணா பல்கலைக்கழகமே மாணவர் கலந்தாய்வை நடத்தி வந்தது. ஆன்லைன் மூலமும் மாணவர்
சேர்க்கை நடத்தப்பட்டது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.