4 தொகுதிக்கு 22-ந் தேதி வேட்பாளர்கள் அறிவிப்பு

அரசியல்

சென்னை, ஏப்.20: அமமுக துணைத் தலைவராக நாமக்கல் அன்பழகன் நியமிக்கப்பட்டிருப்பதாகவும்,
4 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் நாளை மறுதினம் அறிவிக்கப்படும் என்றும் டிடிவி தினகரன் கூறினார்.
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் சென்னை அசோக் நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:- சசிகலாவிடம் ஆலோசனை கேட்டுத்தான் அ.ம. மு.க.வில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அவரது ஆலோசனையின் படி தான் நான் அ.ம.மு.க. பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளேன்.

சசிகலா தேவைப்பட்டால் இங்கு வரலாம். எனவே தலைவர் பதவியை காலியாக வைத்துள்ளோம். அ.ம.மு.க. துணைத் தலைவராக நாமக்கல் அன்பழகன் நியமிக்கப்பட்டுள்ளார். மற்ற நிர்வாகிகளை பின்னர் அறிவிப்போம்.

அ.ம.மு.க. கட்சியை பதிவு செய்ய தொண்டர்களிடம் பிரமாண பத்திரம் பெற்றுள்ளோம். அ.ம.மு.க.வை கட்சியாக பதிவு செய்வது தொடர்பாக வருகிற 22-ந்தேதி மனு அளிக்க உள்ளோம்.4 தொகுதி இடைத்தேர்தலில் பரிசு பெட்டி சின்னத்தை கேட்டுள்ளோம். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி உள்ளேன். ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் குக்கர் சின்னம் வெற்றி பெற்றதால் தொண்டர்கள் தொடர்ந்து குக்கர் சின்னத்தை விரும்புகிறார்கள்.

அ.ம.மு.க. சார்பில் 4 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் 22-ந் தேதி வெளியிடப்படும். அ.தி.மு.க.வில் 95 சதவீதம் தொண்டர்கள் எங்கள் பக்கம் உள்ளனர். அ.தி.மு.க. கட்சியே காணாமல் போகப்போகிறது. அமைச்சர்கள் மட்டும் கட்டில் பிடித்து அழுகிற காலம் வரப்போகிறது.இவ்வாறு அவர் கூறினார்.