சென்னை, ஏப்.20: கேளம்பாக்கத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில், கட்டிடம் சேதமடைந்தது. உடனடியாக, நோயாளிகள் பத்திரமாக மீட்கப்பட்டு, மாற்று இடத்தில் அனுமதிக்கப்பட்டனர்.

கேளம்பாக்கத்தில் தனியார் மருத்துவமனை ஒன்று இயங்கிவருகிறது. 2 மாடிக்கட்டிடத்தில் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் இம்மருத்துவமனையில், இன்று அதிகாலை 4.30 மணியளவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.

அவசர சிகிச்சை பிரிவிற்கு மேல் மாடியில் (2-வது மாடியில்) உள்ள வார்டில் அமைக்கப்பட்டிருந்த ஏசி-யிலிருந்து திடீரென புகை வந்துள்ளது. இதை கண்ட மருத்துவமனை ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு, அப்பகுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த 25-க்கும் மேற்பட்ட நோயாளிகளை வேறு வேறு இடத்திற்கு மாற்றினர்.
இது குறித்த தகவலறிந்து, சிறுசேரி, தாம்பரம், திருக்கழுக்குன்றம் ஆகிய இடங்களில் இருந்து 3 தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளது.

அதற்குள், மளமளவென பரவிய தீ கட்டிடம் முழுவதும் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது. அத்துடன், கட்டிடத்தில் அமைக்கப்பட்டிருந்த சுற்றுப்புற கண்ணாடிகள் வெப்பம் தாங்காமல் வெடித்து சிதற ஆரம்பித்துள்ளது. இதன்காரணமாக, தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக போராடி தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். உரிய நேரத்தில் தீவிபத்து கண்டறியப்பட்டதால், உயிர்சேதங்களும், அசம்பாவிதங்களும் தவிர்க்கப்பட்டுள்ளன.

தீவிபத்து ஏற்பட்ட பகுதியில் மருந்து விற்பனைக்கூடம் இருந்ததாகவும், விபத்து கண்டறியப்பட்ட அடுத்த நிமிடத்திலேயே துரிதமாக செயல்பட்டு மருந்துகள் அனைத்தையும் வேறு இடத்திற்கு மாற்றியதால், பெரும் பொருட் சேதம் தவிர்க்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் மருத்துவமனை கட்டிடம் முழுவதும் சேதமடைந்தது. மின்சார கோளாறு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த விபத்திற்கான காரணம் குறித்து கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர்.
மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.