மேல்மருவத்தூர் ஏப். 20: மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் சித்திரைப் பௌர்ணமியை முன்னிட்டு 1008க்கும் மேற்பட்ட சிறப்பு யாககுண்டங்கள் அமைத்து ஒரு மாபெரும் கலச, விளக்கு, வேள்வி பூஜையை பங்காரு அடிகளார் நடத்தி வைத்தார்.  சித்ரா பௌர்ணமியையொட்டி மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி சித்தர் பீடத்தில் 1008 சிறப்பு யாகம், பூஜைகள் நடைபெற்றது.

இந்த யாகத்தை அருள்மிகு பங்காரு அடிகளார் முன்னிலையில் நடைபெற்றது. வேள்வியில் சூலம், ஒற்றை நாகம், இரட்டை நாகம், முக்கோணம், சதுரம், சாய் சதுரம், அறுகோணம், எண்கோணம், வட்டம் போன்ற கோணங்களை உள்ளடக்கி அமைத்து 1000க்கும் மேற்பட்ட யாக குண்டங்களையும், 1000க்கும் மேற்பட்ட கலச, விளக்குகளையும் ஆன்மிககுரு அடிகளாரின் வழிகாட்டுதலின்படி அமைத்து வேள்வி பூஜை நடைபெற்றது.

இன்று வேள்வியின் துவக்கமாக மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் தலைவர் இலட்சுமி பங்காரு அடிகளார் முன்னிலையில் யாக சாலை முழுவதும் திருஷ்டி எடுக்கப்பட்டது. தொடர்ந்து “கோ பூஜை’ நடைபெற்றது. வேள்வியில் வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு, அரசு தேர்வாணைக்குழு தலைவர் அருள்மொழி, ஓய்வுபெற்ற நீதிபதிகள் முருகேசன் மற்றும் முதலமைச்சரின் சிறப்பு திட்ட அதிகாரி ராதாகிருஷ்ணன், காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி கருணாநிதி மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். மேலும் இயக்கத் துணைத்தலைவர் கோ.ப.அன்பழகன் விழாவில் பங்கேற்று சிறப்பித்தார்.

அத்துடன் தீயணைப்பு உபகரணங்கள் நிறுவப்பட்டிருந்தன. முதல்உதவி மையங்களும் அமைக்கப்பட்டிருந்தன. பாதுகாப்பு ஏற்பாடு மற்றும் பிற ஏற்பாடுகளை ஆதிபராசக்தி இளைஞரணி மற்றும் மகளிர் அணியினர் முறையே இயக்கத் துணைத் தலைவர்கள் கோ.ப.செந்தில்குமார் மற்றும் ஸ்ரீதேவி ரமேஷ் தலைமையில் செவ்வனே செய்திருந்தனர்.

விழா ஏற்பாடுகளை இயக்கத் தலைவர் இலட்சுமி பங்காரு அடிகளார் தலைமையில் தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் காரைக்கால் மாவட்ட ஆதிபராசக்தி சக்திபீட மற்றும் வழிபாட்டு மன்ற சக்திகள், தஞ்சை மாவட்ட தலைவர் சக்தி.வாசன் மற்றும் சக்திபீடங்களின் இணைச்செயலாளர் இரா÷ஐந்திரன் பொறுப்பிலும், சிறப்பாக ஏற்பாடுகள் செய்திருந்தனர்.