புதுடெல்லி, ஏப்.20: பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வணிகர்களுக்கு ரூ.50 லட்சம் வரை பிணையில்லா கடன் வழங்கப்படும் என்றும், சிறு வணிகர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் ரூ.10 லட்சத்திற்கான விபத்து காப்பீடு கிடைக்கும் என்றும் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

அகில இந்திய வணிகர்கள் கூட்டமைப்பு (சிஏஐடி) சார்பில் தேசிய வணிகர்கள் மாநாடு டெல்லி தால்கதோரா உள்விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது:-  ஒரே தேசம் – ஒரே வரி என்ற கனவை நனவாக்கியுள்ளோம். வணிகர்கள் எதிர்கொண்டு வந்த பல்வேறு பிரச்னைகளுக்கு ஜிஎஸ்டியால் தீர்வு காணப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி அறிமுகப்படுத்திய பிறகு, வணிகத்தில் வெளிப்படைத் தன்மை அதிகரித்துள்ளது. பதிவுசெய்யப்பட்ட வணிகர்களின் எண்ணிக்கை 2 மடங்கியாகியுள்ளது.
பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஏற்றுமதியை 2 மடங்காக்குவோம். 5 டிரில்லியன் டாலர் அளவுக்கு பொருளாதார வளர்ச்சி வணிகர்களின் பங்கு இல்லாமல் சாத்தியமில்லை. ஜனசங்க காலத்திலிருந்தே இன்ஸ்பெக்டர் ராஜ்ஜியத்தை எதிர்த்து வந்த வரலாறு உண்டு.

வறுமை, நோய், தூய்மையின்மை ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்களில் தொடர்ந்து வெற்றி கண்டு வருகிறோம். பாஜக தேர்தல் அறிக்கையில் வணிகர்கள் நலனுக்கு பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஆட்சிக்கு வந்தவுடன் தேசிய வணிகர்கள் நல வாரியம் அமைக்கப்படும். இது அரசுக்கும் வணிகர்களுக்கும் ஒரு பாலமாக இருக்கும் வகையில் நிரந்தரமாகச் செயல்பட வழிவகை செய்யப்படும்.

பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், வணிகர்களுக்கு பிணையம் இல்லாமல் ரூ.50 லட்சம் வரை கடன், ஜிஎஸ்டி பதிவு செய்துள்ள வணிகர்களுக்கு ரூ.10 லட்சத்துக்கான விபத்துக் காப்பீட்டு, கடன் அட்டை, சிறுவணிகர்களுக்கு ஓய்வூதியம் ஆகியவை அறிமுகப்படுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதி அளித்தார்.