திருச்சி, ஏப்.20: திருச்சி நாடாளுமன்ற தொகுதியை சேர்ந்த 3 வாக்குச்சாவடிகளில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று அ.ம.மு.க. வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் மாவட்ட கலெக்டர் சு. சிவராசுவிடம் மனு கொடுத்தார்.

திருச்சி நாடாளுமன்ற தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் திருச்சி கலெக்டர் சிவராசுவிடம் அளித்த மனுவில் கூறியதாவது:-
திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை மச்சுவாடி நகராட்சி பள்ளியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மாற்றி வைக்கப்பட்டு இருந்தது.
இதே போன்று கறம்பக்குடி ஒன்றியத்தில் அமைக்கப்பட்டிருந்த 224, 230, 232 ஆகிய எண்கள் உடைய வாக்குச்சாவடிகளில் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளராகிய எனது முகம் மெழுகு பூசி மறைக்கப்பட்டு இருந்தது. அந்த 3 வாக்குச்சாவடிகளிலும் மறு தேர்தல் நடத்த உத்தரவிடவேண்டும்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் முக் குலத்தோர் மேல் நிலைப்பள்ளியில் அமைக்கப் பட்டிருந்த வாக்குச்சாவடி எண் 61–ல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் வரிசை மாற்றி வைக்கப்பட்டு இருந்தது. இதே போல் திருச்சி நகரில் இ.ஆர். மேல்நிலைப்பள்ளி உள்பட பல வாக்குச்சாவடிகளிலும் மாற்றி வைக்கப்பட்டு குளறுபடி செய்யப்பட்டு உள்ளது.

நான் தேர்தல் பிரசாரத்தின்போது இரண்டாவது மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முதல் வரிசையில் எனது பெயர் மற்றும் சின்னம் வைக்கப்பட்டு இருக்கும் என குறிப்பிட்டு இருந்தேன்.  ஆனால் 2வது இடத்தில் வைக்க வேண்டிய எந்திரத்தை பல வாக்குச்சாவடிகளில் முதல் இடத்தில் வைத்து விட்டதால் எனக்கு பதிவாக வேண்டிய வாக்குகளின் அளவு குறைந்திருக்கும் என நினைக்கிறேன்.

இதன் பின்னணியில் ஆளும் கட்சியினரின் தலையீடு இருந்திருக்கும் என கருதுவதால் இதுபற்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால்  நீதி கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடருவேன் என்றார்.