மதுரையில் வாக்குப்பதிவு இயந்திர அறையில் அத்துமீறிய அதிகாரி; கட்சியினர் அதிர்ச்ச…
மதுரை மக்களவை தொகுதியில் வாக்குகள் பதிவு செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஓரிடத்தில் வைக்கப்பட்டு, அந்த அறை பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதற்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, அறை முழுவதும் சிசிடிவி கேமரா மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று பிற்பகல் 3 மணிக்கு பெண் அதிகாரி ஒருவர் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு அனுமதியின்றி நுழைந்துள்ளார். 2 மணி நேரம் ஆகியும் அவர் திரும்பவில்லை. இதனால் காவலர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

உடனே உள்ளே சென்று, அவரை அழைத்து ஓரிடத்தில் அமர வைத்தனர். பின்னர் ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர். இதையடுத்து நடந்த விசாரணையில் அவர் எதுவும் செய்யவில்லை என்று கூறி அனுப்பி வைக்கப்பட்டார்.

ஆனால் அவர் சில ஆவணங்களை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல் பரவியதை அடுத்து, எதிர்க்கட்சிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசன் ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட கட்டடத்திற்கு வெளியே பல்வேறு அரசியல் கட்சியினர் திரண்டுள்ளனர். அவர்கள் போலீசாரிடம் விளக்கம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
யார் அந்த பெண் அதிகாரி, உள்ளே என்ன செய்தார், 3 அடுக்கு பாதுகாப்பை மீறி அனுமதியின்றி எப்படி சென்றார். சிசிடிவி காட்சிகளை எங்களுக்கு காண்பிக்க வேண்டும். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. சம்பந்தப்பட்ட இடத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தற்போது மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன், அமமுக வேட்பாளர் டேவிட் அண்ணாதுரை ஆகியோர் மையத்திற்கு வந்துள்ளனர்.