கொழும்பு, ஏப்.21:இலங்கை தலைநகர் கொழும்பில் இன்று அதிகாலை ஈஸ்டர் பண்டிகையை யொட்டி பிரார்த்தனை நடந்துகொண்டிருந்தபோது 3 தேவாலயங்கள் மற்றும் 3 நட்சத்திர ஓட்டல்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில் 129 பேர் வரை பலியாகி இருப்பதாகவும், சுமார் 250 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் கிடைத்துள்ளது.

இச்சம்பவத்துக்கு உடனடியாக யாரும் பொறுப்பேற்கவில்லை. நிலைமையை சமாளிப்பது குறித்து அதிபர் சிறிசேனா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே அவசர ஆலோசனை நடத்தினார்கள். இலங்கை நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வருவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.

2009-ல் இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடைபெற்ற இறுதி கட்ட போருக்கு பிறகு அந்நாட்டில் பெரிய அளவில் வன் முறை சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை.

இந்நிலையில் இன்று காலை ஈஸ்டர் பண்டிகையையொட்டி கொழும்பில் கொச்சிக்காடை என்ற இடத்தில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில் பிரார்த்தனை நடந்துகொண்டிருந்தது. அப்போது திடீரென குண்டுவெடித்தது. இதில் பலர் ரத்த வெள்ளத்தில் உடல் சிதறி இறந்தனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.

இதேபோல் நீர்க்கொழும்பு என்ற இடத்தில் உள்ள இன்னொரு தேவால யத்திலும், அதன் அருகில் உள்ள மற்றொரு தேவாலயத்தில் அடுத் தடுத்து குண்டுகள் வெடித்தன.

கொழும்பு நகரில் சுற்றுலா பயணிகள் தங்கியிருக்கும் 3 நட்சத்திர ஓட்டல்களிலும் தொடர் குண்டுகள் வெடித்தன. குண்டு வெடித் ததை ஓட்டல் நிர்வாகங்கள் உறுதிப்படுத்தின. 6 இடங்களில் நடைபெற்ற இந்த குண்டுவெடிப்பில் 129 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

250க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். அதில் பலரது உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இதில் இரண்டு தேவாலயங்களில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடந்திருப்பதாக சந்தேகிக்கப்படு கிறது.

சம்பவம் நடந்த இடங்களில் ராணுவம் மற்றும் போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர். இந்த வன்முறைக்கு எந்த இயக்கமும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், இலங்கை தூதருடன் தொடர்புகொண்டு நிலைமையை கேட்டு வருகிறோம். நிலவரத்தை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது என்றார்.

இச்சம்பவம் இலங்கை அரசுக்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது. அதிபர் சிறிசேனா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ஆகியோர் உடனடியாக உயர்மட்ட ஆலோசனை நடத்தினார்கள்.

பொது மக்கள் யாரும் வீடுகளிலிருந்து வெளியேற வேண்டாம் என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

எச்சரித்த இந்தியா: 
இதற்கிடையே, இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு நடத்தப்படலாம் என இந்தியா எச்சரித்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.இந்தியாவின் எச்சரிக்கையை அலட்சியம் செய்ததால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.