தமிழக அரசு உத்தரவு: சுப்ரீம்கோர்ட் ரத்து

TOP-4 இந்தியா

புதுடெல்லி, ஏப்.8: கோவில் வளாகங்களில் உள்ள கடைகளை அகற்றுவது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட  அரசாணையை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து, தமிழ்நாட்டில் அனைத்து கோவில் வளாகங்களில் உள்ள கடைகள், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என தமிழக அரசு, அரசாணை பிறப்பித்தது. மேலும் கடைகளை அகற்றவும் கெடுவிதித்தது.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மதுரையைச் சேர்ந்த குமார் என்பவர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து குமார் மற்றும் வியாபாரிகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கோவில்களில் உள்ள கடைகளை அகற்ற பிறப்பிக்கப்பட்ட தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்தது. பின்னர் தொடர்ந்து விசாரணை நடை பெற்றது.

இந்த வழக்கில் மனுதாரர்கள், இந்து சமய அறநிலையத்துறை, தமிழக அரசு தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அப்போது, கோவில்களில் உள்ள கடைக்காரர்களின் தரப்பு கருத்துகளை கேட்கும் வாய்ப்பை அவர்களுக்கு ஏன் தமிழக அரசு வழங்கவில்லை? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்து அறநிலையத்துறை சட்டம் 1959-ன் அடிப்படையில் கோவில்களில் உள்ள கடைகளை அப்புறப்படுத்துவதற்கான நடைமுறைகள் உள்ளன. அந்த நடைமுறைகளின் அடிப்படையில் தங்கள் கருத்துகளை தெரிவிக்க கடை உரிமையாளர்களுக்கு ஒரு வாய்ப்பு அளித்து விட்டு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அறிவுறுத்தினர்.

வாதப் பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், கோவில் வளாகங்களில் உள்ள கடைகளை அகற்றுவது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாரணைக்கு தடை விதித்தனர்.