சென்னை.ஏப்.21:திருப்பரங்குன்றம், ஓட்டபிடாரம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 19-ம் தேதி வாக்குபதிவு நடைபெறவுள்ள நிலையில், இந்த 4 தொகுதிகளில் வேட்புமனுதாக்கல் நாளை தொடங்குகிறது.

எடப்பாடி பழனிசாமியை முதல்வர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என போர்க்கொடி துக்கியதன் காரணமாக 18 அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதனால் இந்த 18 தொகுதிகள் காலியான பேரவை செயலாளர் தேர்தல் ஆணையத்திடமிடம் தெரிவித்ததை தொடர்ந்து, 18 தொகுதிகளுக்கு தேர்தலை நடத்த தேர்தல் முடிவு செய்திருந்த நிலையில், திருப்பரங்குன்றம், சூலூர் அதிமுக எம்எல்ஏக்கள் மரணம் அடைந்ததை தொடர்ந்து இந்த தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு தேர்தல் ஆணையம் தள்ளப்பட்டது.

இந்நிலையில் திருப்பரங்குன்றம், ஒட்டபிடாரம், அரவக்குறிச்சி ஆகிய தொகுதி தேர்தல் தொடர்பாக வழக்கு நிலுவையில் இருந்ததால், இந்த தொகுதிகள் தவிர்த்து மீதமுள்ள 18 தொகுதிகளுக்கு தேர்தலை கடந்த 18-ம் தேதி மக்களவை தேர்தலுடன் இணைந்து நடத்தியது. 3 தொகுதி தேர்தல் தொடர்பான வழக்குகள் வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து, மீதமுள்ள தொகுதிகளுக்கும் தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் திமுக, அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்தன.

இந்த கோரிக்கையின் அடிப்படையில் அடுத்த மாதம் 19-ம் தேதி காலியாக 4 தொகுதிகளுக்கு வாக்குபதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேலும் 22-ம் தேதி முதல் (நாளை) வேட்புமனுதாக்கல் கட்சிகள் தாக்கல் செய்யலாம் எனவும் அறிவித்திருந்தது. இதை தொடர்ந்து திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மேலும் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் விருப்பமனு இன்று முதல் அக்கட்சி தலைமை அலுவலகத்தில் பெறப்படுகிறது. இதை தொடர்ந்து அதிமுக ஆட்சிமன்ற குழு கூடி இந்த 4 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளரை ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பார்கள்.

அதே போன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை வரும் 23-ம் தேதி அறிவிப்பேன் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதிமய்யம் சார்பிலும் வேட்பாளரை நிறுத்த அக்கட்சியின் தலைவர் கமல் முடிவு செய்து அதற்கான பணியில் ஈடுபட்டுள்ளார்.