தீவிர ஜாதி வெறியரான மாரிமுத்துவின் மகன் நாயகன் மாதம்பட்டி ரங்கராஜ். கொடைக்கானலில் கேசட் கடை வைத்திருக்கிறார். காதலர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். அந்த ஊர் இளைஞர்களின் காதலுக்கு இளையராஜா பாடல்கள் மூலமாக உதவி வருகிறார்.

இந்த நிலையில், ராஜஸ்தானில் இருந்து சர்க்கஸ் குழு ஒன்று அந்த பகுதிக்கு வருகிறது. அதில் முக்கிய பங்காக நாயகி சுவாதி திரிபாதியின் சாகசம் பார்க்கப்படுகிறது. சுவாதி சர்க்கஸில் கத்தி வீசும் சாகசத்தில் உயிரை பணயம் வைத்து நிற்கிறார். சுவாதியை பார்க்கும் ரங்கராஜுக்கு அவர் மீது காதல்  வருகிறது. சுவாதியை கரம்பிடிக்க
ஆசைப்படுகிறார்.

நாயகி மீது ரங்கராஜ் பைத்தியமாக திரிய, சுவாதியும் ரங்கராஜை காதலிக்க ஆரம்பிக்கிறார். இவர்களது காதல் சுவாதியின் அப்பாவுக்கு தெரிய வர, அவர் ரங்கராஜுக்கு ஒரு போட்டி வைக்கிறார். இதற்கிடையே இவர்களது காதல் மாரிமுத்துவுக்கும் தெரிய வருகிறது. அனைத்திற்கும் ஜாதி பார்க்கும் மாரிமுத்து தனது மகனின் காதலுக்கு தடையாக நிற்கிறார்.

கடைசியில், இவர்களது காதல் சேர்ந்ததா? அவர்களது வாழ்க்கைப் பயணம் என்னவானது? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே எளிமையான மீதி காதல் கதை. இரண்டு மூன்று கெட்அப்களில் வரும் ரங்கராஜ் புதுமுகம் என்று தெரியாத அளவுக்கு சிறப்பாக நடித்திருக்கிறார். சுவாதி திரிபாதி அலட்டல் இல்லாமல் அழகாக நடித்துவிட்டு சென்றிருக்கிறார். விக்னேஷ்காந்த் பல படங்களில் நடித்திருந்தாலும், இந்த படம் அவருக்கு வித்தியாசமானதாக அமைந்திருக்கிறது. மாரிமுத்து ஜாதிவெறி பிடித்தவராகவும், வேலராமமூர்த்தி பாதிரியரராகவும் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

கட்டாயத்தின் பேரில் நடக்கும் திருமணத்தால் ஏற்படும் விளைவுகளை மையப்படுத்தி இந்த படத்தின் கதை நகர்கிறது. சர்க்கஸ் கலைஞர்களை பற்றிய கதையில், எளிமையான காதலை புகுத்தி இதை உருவாக்கி இருக்கிறார் சரவண ராஜேந்திரன். அவரின் திரைக்கதை ஓட்டத்திற்கு அவரது சகோதரரான இயக்குனர் ராஜூ முருகனின் கதை, வசனம் கைகொடுத்துள்ளது.

படம் முழுக்க இளையராஜாவின் பாடல்களாலேயே நகரும்போதிலும் ஷான் ரோல்டனின் இசையும் படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. எஸ்.கே.செல்வகுமாரின் ஒளிப்பதிவில் கொடைக்கானலின் அழகும், வட இந்தியாவின் நிலையும், அற்புதமாக பதிவாகி உள்ளது.