மதுரை, ஏப்.21: மதுரையில் வாக்கு பதிவு ஆவணங்கள் உள்ள அறைக்குள் நுழைந்த பெண் தாசில்தாரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுத்துள்ளார். கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க் கட்சியினர் தர்ணாப் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து கலெக்டர் விசாரணை நடத்தி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

மதுரை மக்களவை தொகுதியில் வாக்குகள் பதிவு செய்யப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் மதுரை அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டது. இதற்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, அறை முழுவதும் சிசிடிவி கேமரா மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வாக்குப்பதிவுஇயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு மர்ம நபர் ஒருவர் நுழைந்து சில ஆவணங்களை நகல் எடுத்து
சென்றதாக கூறப்பட்டது.

இதுகுறித்த தகவல் பரவியதை அடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசன் கலெக்டரிடம் புகார் அளித்தனர். மேலும் இது குறித்து மாவட்ட கலெக்டர் நேரில் வந்து விளக்கம் அளிக்கும் வரை தர்ணா போராட்டம் நடைபெறும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நேற்றிரவு அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

அறைக்குள் சென்றவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் நடராஜன் செய்தியாளர்களிடம் கூறினார். இதன்பின் வாக்குப்பதிவு ஆவண அறையில் நுழைந்ததாக கலால் வட்டாட்சியர் சம்பூர்ணத்திடம், மாவட்ட கலெக்டர் விசாரணை மேற்கொண்டார். அவர் 2 மணிநேரம் ஆவண அறையில் இருந்துள்ளார். ஆனால், வாக்கு பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ள பாதுகாப்பு அறைக்குள் நுழையவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பெண் தாசில்தார் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.