சென்னை, ஏப்.21: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ள நிலையில், மீன்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. வஞ்சிரம் கிலோ ரூ 800 வரை விலை உயர்ந்ததால், மீன்பிரியர்கள் கவலை அடைய செய்துள்ளது.

தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் கடந்த 15-ம் தேதி முதல் 2 மாதங்களுக்கு மீன்பிடித் தடைக்காலம் அமலில் உள்ளது. இதன் காரணமாக பெரிய படகுகள் மூலம் கிடைக்கும் மீன்களின் வரத்து முற்றிலும் நின்றது. சிறு படகுகள் மூலம் பிடிக்கப்படும் மீன்கள், கர்நாடகா, கேரளா, மங்களூரு, மும்பை போன்ற பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படும் மீன்களே தற்போது விற்கப்படுகின்றன. இதனால் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

சென்னையில் கட்லா மீன்120 ரூபாய்க்கும், கடம்பா சிறியது 150 ரூபாய்க்கும், கடம்பா பெரியது 200 ரூபாய்க்கும், வஞ்சிரம் சிறியது 600 ரூபாய்க்கும், வஞ்சிரம் பெரியது 800 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. வவ்வால் கருப்பு 600 ரூபாயாகவும், வவ்வால் வெள்ளை 900 ரூபாயாகவும் உள்ளது.

கிழக்குக் கடற்கரையில் கடைப் பிடிக்கப்படும் மீன்பிடித்தடைக் காலமே தவறானது என்று வாதிடுகின்றனர் மீனவர்கள்.மழைக்காலமான அக்டோபர், நவம்பர், டிசம்பரில் மீன்பிடி தடைக் காலத்தை கொண்டு வரவேண்டுமென்றும் அவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மீன்பிடித் தடைகாலம் காரணமாக 5 ஆயிரம் முதல் 15 ஆயிரம் விசைப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ளதால், மீனவர்கள் வருவாய் இழந்துள்ளனர். தடைக் காலம் 61 நாட்களாக உள்ள நிலையில் ஒரு நாளைக்கு 500 வீதம் 30,000 ரூபாய் உதவித் தொகை தரவேண்டுமென்றும் மீனவர்கள் கோரிக்கை வைக்கின்றனர். தடைக்காலம் அமலக்கு வந்த 5 நாட்களிலேயே, மீன்களின் விலை கிலோவுக்கு 25 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளது.

மீன்பிடி தடைகாலம் தொடங்கி 5 நாட்களிலேயே மீன்களின் விலை கடுமையாக உயரந்துள்ள நிலையில், மீதமுள்ள 35 நாட்களில் மீன்களின் விலை பல மடங்கு உயரும் என தெரிகிறது.

வரும் நாட்களில் வஞ்சிரம் கிலோ ரூ. 2000 வரையும், வவ்வால் மீன் விலை ரூ 1000 வரையிலும், கட்லா, கடம்பா, சங்கரா, நெத்தி போன்ற மீன்களின் விலையும் வரும் நாட்களில் கணிசமாக உயரும் எனவும், இறால், நண்டு உள்ளிட்ட பொருட்களின் கணிசமாக உயருமான மீனவர்கள் தெரிவித்துள்ளனர். மீன்களின் விலை கடுமையாக உயரும் என்பதால் மீன்பிரியர்களை கவலை அடைய செய்துள்ளது.