சென்னை, ஏப்.21: முகப்பேரில் நேற்று போதைத் தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் ரூ.3.75 லட்சம் மதிப்பிலான ஸ்டாம்ப் வடிவ போதை மாத்திரை பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக திருவல்லிக்கேணியை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியில் உள்ள தனியார் நீச்சல் பயிற்சி நிலையம் அருகே போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போதை பொருள் தடுப்பு பிரிவு தனிப்படை போலீசார் அந்த பகுதியில் ரகசியமாக கண்காணித்தனர்.

அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமாக மஞ்சள் நிற டியோ இருசக்கர வாகனத்தில் சுற்றி திரிந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதையடுத்து அவரது உடமைகளை போலீசார் சோதனை செய்தனர். அதில் அவர் போதை மாத்திரைகளை வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

அவரிடம் இருந்த ஸ்டாம்ப் வடிவிலான போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.3.75 லட்சம் என்று தெரிய வந்தது. மேலும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் பெயர் சரத் சரவணன் (வயது 23) என்பதும் அவர் திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.

அவரை கைது செய்த போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார், அவரிடம் இருந்த இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அவருக்கு அந்த மாத்திரைகளை சப்ளை செய்தது யார் ? என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.