சென்னை, ஏப்.21: கோடைக்காலத்தையொட்டி சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் சென்னையில் உள்ள சுற்றுலா தலங்கள் மற்றும் திருக்கோயில்களுக்கு 100 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதுகுறித்து சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகச் செய்திக் குறிப்பில் கூறியிருப்பது வருமாறு:- பொது மக்களின் வசதிக்காக ஏப்ரல் 19-ல் தொடங்கி ஜூன் மாதம் 30-ந் தேதி வரை அனைத்து சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் நகரின் பல்வேறு இடங்களிலிருந்து சுற்றுலாத்தலங்கள் மற்றும் திருத்தலங்கள் செல்லும் பொது மக்களின் நலனுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

அட்டவணையில் குறிப்பிடப் பட்டுள்ள பகுதிகளுக்கு மாநகரப் போக்குவரத்துக் கழகத்தால் 100 சிறப்பு பேருந்துகள், பின்வரும் தடங்களான 2ஜி, 27எல், 25ஜி, 11எச், 12ஜி, 45பி, 45இ, 102, 13, 6டி, 2ஏ, 27பி, 22பி, 27எச், 40ஏ, 29ஏ, 500, 517, பி18, ஜி18, இ18, 70வி, 99, வி51, 517 கட், 109 கட், 515, 588, 514, 547, 580, 159 , 50, 72சி, 29இ, 59 ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படும்.

அண்ணாசதுக்கம் / அண்ணாசதுக்கம் வழியாக – 50 பேருந்துகள், கோவளத்துக்கு – 3, வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு – 21, மாமல்லபுரத்துக்கு – 7, பெரியபாளையம் அருள்மிகு பவானி அம்மன் கோயிலுக்கு – 8, திருவேற்காடு அருள்மிகு ஸ்ரீதேவி கருமாரி அம்மன் கோயிலுக்கு – 8, சிறுவாபுரி முருகன் திருக்கோயிலுக்கு – 3, என மொத்தம் 100 பேருந்துகள் இயக்கப்படும் இவ்வாறு மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்புப் பேருந்துகளில்  சாதாரணக் கட்டணத்தை விட அதிகக் கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிகிறது.