ராமேஸ்வரம், ஏப்.22:  இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து தமிழகக் கடலோரப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ராமேஸ்வரம், தூத்துக்குடி கடலோரங்களில் உஷார் நடவடிக்கை எடுக்கப்பட்டு கடலோர பாதுகாப்பு படையின் ரோந்து பணியும் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.
கொழும்பில் 8 இடங்களில் நேற்று அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்புகளில் 290 பேர் பலியாகி உள்ளனர். மனித வெடிகுண்டுகளாக தீவிரவாதிகள் மாறி நட்சத்திர ஓட்டல்கள், தேவாலயங்களில் இந்த தாக்குதலை நடத்தி உள்ளனர்.

இந்தத் தாக்குதலை இலங்கையில் செயல்பட்டு வரும் தாவீத் ஜமாத் என்ற இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு நடத்தியதாக தெரியவந்துள்ளது. இந்த அமைப்பைச் சேர்ந்த 27 பேர் இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர். மாலத்தீவு, வங்கதேசத்திலும் இந்த தீவிர வாதிகள் செயல்பட்டு வருவதாக தெரிய வந்துள்ளது. 2016-ல் டாக்காவில் உள்ள ஓட்டலில் நடத்திய தாக்குதலைப் போலவே நேற்று கொழும்பிலும் நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு பின்னணியாக இருந்தவர்கள் அண்டைய நாடுகளுக்குள் குறிப்பாக இலங்கைக்கு அருகாமையில் உள்ள ராமேஸ்வரம், தூத்துக்குடிக்கு தப்ப முயற்சிக்கலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் தீவு இலங்கைக்கு மிக அருகாமையில் இருக்கிறது. எனவே இந்த கடல் பகுதியில் சந்தேகத்திற்கு உரிய படகுகள் நடமாட்டம் இருந்தால் உடனே கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவிக்குமாறு மீனவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

ராமேஸ்வரத்தில் உள்ள தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு அமைப்பு, சுங்கத்துறை போலீஸ், உளவுத்துறை ஆகியவை இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன. தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு நிலையத்தில் இருந்து கோபர் கிராப் எனப்படும் படகுகளை இடைமறிக்கும் கப்பல் வரவழைக்கப்பட்டு இருக்கிறது. இதேபோல் தூத்துக்குடி கடலோரப்பகுதியிலும் இடைமறிக்கும் 2 அதிநவீன கப்பல் மற்றும் கடல், நிலம் ஆகிய இரண்டிலும் செல்லும் வாகனங்கள் மூலமும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருப்பதாக தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு காவல் படையின் தலைவர் பி.வி.நவீன் கூறினார்.

மீன்பிடி படகுகள் நிறுத்தப்பட்டுள்ள இடங்கள், கலங்கரை விளக்கங்கள் திருச்செந்தூரில் கடலோரத்தில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில், மணப்பாடு ஆகிய இடங்களிலும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேபோல் பாக்ஜலசந்தி, மன்னார் வளைகுடா பகுதிகளிலும் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான
சர்வதேச கடல் பகுதிகளிலும் ரோந்து நடவடிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உ“ளள 13 கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகம் உள்ளிட்ட பிற இடங்களுக்கும் இன்று பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.