‘கிரிக்கெட்டின் கடவுள் தோனி’: புகழ்ந்து தள்ளும் பிரபலங்கள்

விளையாட்டு

பெங்களூரு, ஏப்.22: நேற்றைய போட்டியில் சென்னை அணி தோல்வியடைந்தபோதிலும், கேப்டன் தோனியின் அதிரடி ஆட்டத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
சென்னைக்கு அணிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், பெங்களூரு அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. டாஸ் ஜெயித்து சேஸிங் செய்ய நினைத்த சென்னை அணிக்கு 162 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி, சென்னை அணியின் தொடக்க வீரர்கள் வாட்சன், டூ பிளஸி, ரெய்னா, கேதர் ஜாதவ் ஆகியோர் ஒற்றை இலக்கில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். சிறிது நேரம் களத்தில் நின்ற ராயுடுவும் 29 ரன்களில் ஆவுட் ஆக, தனி ஒருவனாக நின்ற கேப்டன் தோனி அதிரடி காட்டி அனைவரையும் பிரமிக்க வைத்தார்.

கடைசி ஓவரில் 26 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முதல் 5 பந்துகளில் 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி உள்பட 24 ரன்களை மின்னல் வேகத்தில் சேர்த்தார், தோனி. இருப்பினும், கடைசி பந்தில் வெற்றிக்கு 2 ரன்கள் தேவைபட்டது. இந்த திக் திக் நிமிடங்களில், உமேஷ் யாதவ் வீசிய பந்தை தோனி துரதிஷ்டவிதமாக தவறவிட்டதால், சென்னை அணி தோல்வியடைந்தது. எனினும், முதுகில் ஏற்பட்ட தசைப்பிடிப்பையும் பொருட்படுத்தாமல் அர்ப்பணிப்புடன் விளையாடிய தோனி, கிரிக்கெட்டின் கடவுள் என்று காலா பட நடிகை ஹுமா குரேஷி பாராட்டியுள்ளார். இதுபோக, இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர்கள் சித்தார்த், சதீஷ் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் உட்பட அனைத்து தரப்பினரும் தோனியின் ஆட்டத்தில் பிரமித்துபோய் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

மிரட்டிய தோனி, மிரட்சியில் கோலி:
வெற்றி குறித்து பெங்களூரு கேப்டன் கோலி கூறுகையில், போட்டி முழுவதும் உணர்ச்சிகளால் நிரம்பி இருந்தது. 19-வது ஓவர் வரை நாங்கள் பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்டோம்.
கடைசி ஓவரில் கடைசிப்பந்தில் நடந்த ரன்அவுட் நடக்கும் என்று நான் எதிர்பார்த்தேன். அதுபோல் நடந்துவிட்டது.
சிறிய அளவு ரன் வித்தியாசத்தில் போட்டியில் வென்றாலும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தோனி தன்னால் என்ன சிறப்பாகச் செய்யமுடியுமோ, அடிக்கமுடியுமோ அடித்து, எங்கள் ஒட்டுமொத்த அணிக்கும் அவர் மிகப்பெரிய பயத்தை காட்டிவிட்டார், என்றார்.