சென்னை,ஏப்.22: வாக்குபதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் கட்சிகளை சேர்ந்த முகவர்களை 24 மணிநேரம் இருக்க தேர்தல் ஆணையம் அனுமதி வழங்க வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக தேனி மக்களவை தொகுதி வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: மதுரை மாவட்டத்தில் வாக்குபதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்குள் பெண்அதிகாரி உள்ளே நுழைந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

அவர் எதற்கு அங்கு சென்றார், எதற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது தொடர்ந்து மர்மமாக உள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையம் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.
தபால் ஓட்டுக்களை பொறுத்தவரை அது மாவட்ட கலெக்டர் கட்டுபாட்டில் உள்ளது. ஆனால் வாக்குபதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் எதாவது தவறு நடந்துவிடுமா என்ற அச்சம் அனைத்து கட்சிகளுக்கும் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் நடந்த முடிந்த தேர்தலில் அதிமுக, பிஜேபி கூட்டணி படுதோல்வி அடைய போகிறது.

இந்த தேர்தலில் உண்மையான போட்டி என்பது திமுக, அமமுக இடையே மட்டுமே உள்ளது. இதனால் தான் வாக்கு எண்ணிக்கை நடக்க 1 மாத காலம் உள்ளதால், ஏதாவது தவறு நடக்க வாய்ப்பு உள்ளது. அதற்கு மதுரை சம்பவம் உதாரணமாக அமைந்து விட்டது.
தேனிமாவட்டத்தில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் இரவு 10 மணிக்கு மேல் தங்க அந்த மாவட்ட கலெக்டர், மாவட்ட காவல்துறை அதிகாரி அனுமதி அளிப்பத்தில்லை, ஆகவே இரவு 10 மணிக்கு மேல் வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் கட்சிகளின் சார்பில் முகவர்களை தங்க வைக்க தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்க வேண்டும். தேர்தல் ஆணையம் விதிகள் என்பது சரியாக உள்ளது, ஆனால் அதனை செயல்படுத்துவது மாநில அரசு அதிகாரிகள் என்பதால் தான் சந்தேகம் எழுந்துள்ளது.
கடந்த கால தேர்தல்களின் போது வாக்குபதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் அரசியல் கட்சி முகவர்கள் தங்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், தற்போது அனுமதி மறுக்கப்படுகிறது. தோல்வி பயத்தின் காரணமாக ஆளும் கட்சி முறைகேடு செய்ய வாய்ப்புள்ளது. ஆகவே வாக்குபதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் கட்சி முகவர்கள் 24 மணிநேரம் தங்க அனுமதி அளிக்க கோரி, தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து மனு அளிக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.