சென்னை, ஏப்.23: ஒட்டப்பிடாரம், சூலூர் உள்பட 4 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 19-ந் தேதி நடைபெறும் இடைத்தேர்தலின் போது வாக்காளர்களுக்கு ஒரு வாரத்துக்கு முன்னதாகவே பூத் சிலிப் வழங்கப்படும் என்று மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கூறியிருக்கிறார்.

சென்னையில் இன்று செய்தியாளர் களிடம் கூறியதாவது:- நடந்து முடிந்த தேர்தலின் போது பூத் சிலிப்புகள் வழங்கப்படாததால் ஆங்காங்கே பிரச்சினைகளும் குழப்பங்களும் ஏற்பட்டன. இதனை தவிர்க்க 4 சட்டசபை தொகுதிகளுக்கு நடைபெறும் தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்படும். வாக்குப்பதிவுக்கு ஒரு வாரத்துக்கு முன்னதாகவே அவை வழங்கப்படும்.

மதுரை வாக்குப்பெட்டிகள் இருக்கும் மையத்தில் அனுமதியின்றி அதிகாரிகள் நுழைந்தது தொடர்பாக கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி நேரில் சென்று விசாரணை நடத்தினார். அவர் இன்று அறிக்கை அளிக்கிறார். அந்த அறிக்கை தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். ஏற்கனவே தாசில்தார் உள்பட 3 பேர் இதில் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரியில் 50 ஆயிரம் மீனவர்கள் பெயர் நீக்கப்பட்டதாக கூறிய புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அது தவறான தகவல் ஆகும். இது பற்றி விசாரணை நடத்தியதில் 10 ஆயிரம் பேர்கள் மட்டுமே நீக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.