தூத்துக்குடி, ஏப்.23: தூத்துக்குடியில், குடும்பத்தகராறில் விஜய் ரசிகர் மன்றத் தலைவர் தனது தம்பியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கூறப்படுவதாவது:-

தூத்துக்குடி மாவட்ட விஜய் ரசிகர் மன்றத் தலைவராக இருப்பவர் பில்லா ஜெகன். அவர் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி செயலாளராகவும் இருந்து வருகிறார். லாரி தொழில் உள்பட பல்வேறு தொழில்களை அவர் செய்து வருகிறார்.

பில்லா ஜெகன் தம்பிகளுடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறார். இந்நிலையில் பில்லா ஜெகனின் தம்பிகளில் ஒருவரான சிம்சனுக்கும் அவருக்கும் குடும்ப விஷயத்தில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் தொழிலில் தனக்குரிய பங்கை சிம்சன் கேட்டதாக சொல்லப்படுகிறது.

குடும்ப விவகாரத்திலும் இருவருக்கும் இடையே ஏற்கனவே பிரச்சனை இருந்து வந்த நிலையில், இருவருக்கும் இடையே நேற்று இரவு வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது ஜெகனின் சகோதரர்களும் இருந்ததாக கூறப்படுகிறது. இருவருக்கும் இடையே அவர்கள் சமாதானம் செய்ய முயன்றனர்.

ஆனால். தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த பில்லா ஜெகன், தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து திடீரென சிம்சனை சுட்டுள்ளார். இதில் சிம்சனுக்கு தொடையில் காயம் ஏற்பட்டு ரத்தப் பெருக்கு அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து சிம்சனை மருத்துவ மனைக்கு கொண்டு சென்ற போது, ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தகவலறிந்து வந்த போலீசார், சிம்சனின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிம்சன் இறந்ததைக் கண்ட பில்லா ஜெகன் வீட்டை விட்டு தப்பியோடி தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வருவதுடன், தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பில்லா ஜெகன் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.