அகமதாபாத், ஏப்.23: நாடாளுமன்ற தேர்தலுக்கான 3-வது கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. அகமதாபாத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பிரதமர் மோடி வாக்களித்தார்.

குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள நிஸான் பள்ளி வாக்குச் சாவடியில் பிரதமர் மோடி தனது வாக்கை பதிவு செய்தார். வாக்களித்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

என் தாய் வீடான குஜராத்தில் எனது கடமையை நிறைவேற்ற வாய்ப்பு கிடைத்தன்மூலம் நான் அதிர்ஷ்டசாலி ஆனேன். கும்ப மேளாவில் புனித நீராடினால் தூய்மை அடைவதைப்போல, ஜனநாயக திருவிழாவில் வாக்கை பதிவு செய்தபின் வாக்காளர் தூய்மையானவராக உணரலாம். தேர்தலில் மக்கள் சிந்தித்து வாக்களிக்கவேண்டும்.

பயங்கரவாதத்தின் ஆயுதம் ஐஇடி (வெடிகுண்டு), ஜனநாயகத்திற்கு வலிமை சேர்ப்பது ஓட்டர் ஐடி (வாக்காளர் அடையாள அட்டை). ஐஇடி-யை விட மிகவும் சக்தி வாய்ந்தது ஓட்டர் ஐடி. எனவே நாம் நமது ஓட்டர் ஐடியின் வலிமையை புரிந்துகொள்ளவேண்டும்.

முன்னதாக, காந்தி நகர் சென்ற பிரதமர் மோடி தனது தாயாரை சந்தித்து ஆசி பெற்றார். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.