புதுடெல்லி, ஏப்.23: மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பணப் பட்டுவாடா விவகாரம் தொடர்புடையதாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.  மதுரையைச் சேர்ந்த வழக்குரைஞர் கே.கே.ரமேஷ் உச்சநீதிமன்றத்தில் கடந்த மார்ச் 4-இல் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அதில், “வாக்குக்கு பணம் பெறுவது குற்றம் எனத் தெரிவிக்கும் விளம்பரங்களை வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தான் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் தேர்தல் கமிஷனுக்கு இந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இந்த மனு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் கடந்த 16-ம் தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், இந்த மனு தொடர்பாக தேர்தல் ஆணையத்திடமிருந்து தேவையான வழிகாட்டுதல் பெறும் வகையில், மனுவின் நகலை தேர்தல் ஆணையத்துக்கு அளிக்க வேண்டும். வழக்கு விசாரணை ஏப்ரல் 22-ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த மனு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், தமிழகத்தில் தேர்தல் நிறைவடைந்து விட்டதால், இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இருப்பினும் மனுவில் தெரிவிக்கப் பட்டவை தொடர்பாக குறிப்பிட்ட நேரத்தில் விசாரிக்கும் வகையில் பரிசீலினைக்கு வைக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.