சென்னை, ஏப்.23: தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை அறிக்கை தெரிவிக்கிறது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதன்கிழமை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இந்தக் காற்றழுத்த தாழ்வுப் பகுதி யானது, அடுத்த இரண்டு நாள்களில் வலுப்பெற்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறக்கூடும். இதனால், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங் களிலும் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்து காணப் பட்டது. சில மாவட் டங்களில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேல் 100 டிகிரிக்கும் குறையாமல் வெப்பநிலை இருந்து வருகிறது. இந்நிலையில், வெப்பச்சலனம் காரணமாக காஞ்சிபுரம், கன்னியாகுமரி, திண்டுக்கல், திருவண்ணாமலை, திருவாரூர், திருவள்ளூர், நீலகிரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்த மழை காரணமாக வெப்பம் சற்று தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.