லக்னோ, ஏப்.24:பிரதமர் மோடி களமிறங்கி உள்ள வாரணாசியில் கட்சி விரும்பினால் போட்டியிடத் தயாராக இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், சோனியா காந்தியின் மகளுமான பிரியங்கா கூறியுள்ளார்.

மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத் தேர்தல் மே 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. உத்தரப் பிரதேசத்தில் சோனியா காந்தி போட்டியிடும் ரே பரேலி தொகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பிரியங்கா, செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘வாராணசி தொகுதியில் போட்டியிடுவது குறித்து நான் ஏற்கெனவே கருத்து தெரிவித்துள்ளேன். கட்சி விரும்பினால் அந்தத் தொகுதியில் களமிறங்க நான் தயாராகவே இருக்கிறேன். இப்போதைய மத்திய அரசில் மக்கள் எண்ணற்ற இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர்’ என்றார்.

இதன் பிறகு ராகுல் காந்திக்கு ஆதரவாக கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் பிரியங்கா பிரசாரம் மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்கள் இது தொடர்பாகக் கேள்வி எழுப்பினர். அதற்கு, ‘காங்கிரஸ் கட்சியின் தலைவர் கேட்டுக் கொண்டால், வாரணாசி தொகுதியில் மிகவும் மகிழ்ச்சியுடன் போட்டியிடுவேன்’ என்று பிரியங்கா பதிலளித்தார்.

இந்த தொகுதியில்தான் பிரதமர் மோடி போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.