தஷ்வந்த் தூக்குதண்டனை: சுப்ரீம் கோர்ட் நிறுத்தி வைப்பு

TOP-6 குற்றம்

புதுடெல்லி, ஏப்.8: சிறுமி ஹாசினி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மாங்காடு அடுத்த மவுலிவாக்கம், மாதாநகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த பாபு என்பவரது மகள் ஹாசினி (வயது 6) பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் தஷ்வந்த் (வயது 24) கைது செய்யப்பட்டான். அவன் மீது குண்டர் சட்டம் பாய்ந்த நிலையில் அதனை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம் அவனை ஜாமீனில் விடுதலை செய்தது.

ஜாமீனில் வெளியான தஷ்வந்த், செலவுக்கு பணம் கொடுக்காததால் தனது தாயார் சரளாவை கொடூரமாக கொலை செய்து. அவர் அணிந்து இருந்த 25 பவுன் நகைகளை திருடிக்கொண்டு தப்பி சென்றுவிட்டார். மும்பையில் பதுங்கி இருந்த தஷ்வந்தை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.சிறுமி ஹாசினி கொலை வழக்கு தொடர்பான விசாரணை செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்த் குற்றவாளி எனவும் தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை வழங்கியும் செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து தஷ்வந்த் சார்பில் ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, எரித்துக் கொன்ற வழக்கில் குற்றவாளி தஷ்வந்துக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை சென்னை ஐகோர்ட் உறுதி செய்தது. இதனை எதிர்த்து தொடரபட்ட மேல் முறையீடு வழக்கில் தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடைவிதித்து உள்ளது.