சென்னை, ஏப்.24:வளசரவாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் உள்ள வாக்காளர் பட்டியலில் நடிகர் சிவகார்த்திகேயன் பெயர் இல்லை. அவரை ஓட்டுப்போட அனுமதித்த அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ கூறியிருக்கிறார்.

சென்னையில் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ கூறியதாவது:-

வளசரவாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் உள்ள வாக்காளர் பட்டியலில் நடிகர் சிவகார்த்திகேயன் பெயர் இல்லை. அவரை ஓட்டுப்போட அனுமதித்தது தவறு. எனவே அந்த அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இது குறித்து தலைமை தேர்தல் ஆணையத்துக்கும் அறிக்கை அனுப் பப்படும். நடிகர் சிவகார்த்திகேயன் பெயர் விடுப்பட்டது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளது.

இதேபோல, நடிகர் ஸ்ரீகாந்துக்கும் ஓட்டு இல்லை. ஆனால், அவர் 17டி படிவத்தை வாங்கி, பூர்த்தி செய்து அதன் பிறகு ஓட்டுப்போட்டு இருக்கிறார். அதில் எந்த தவறும் இல்லை.மதுரையில் வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையத்திற்கு அனுமதியின்றி சென்ற அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அங்கு நேரில் சென்று ஆய்வு செய்த கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியின் அறிக்கை தலைமை தேர்தல் ஆணையத்துக்கு இன்று அனுப்பப்படுகிறது.

கரூரில் வாக்கு எண்ணும் இயந்திரங்கள் உள்ள மையத்திற்கும் போதிய பாதுகாப்பு இல்லை என்ற புகார் வந்திருக்கிறது. மற்றொரு கூடுதல் அதிகாரி நேரில் சென்று ஆய்வு நடத்துவார். இதனிடையே, வாக்குப்பதிவு இயந்திர மையங்களின் பாதுகாப்பு, வாக்கு எண்ணும் பணிகள் ஆகியவை தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல் துறை அதிகாரி கள் ஆகியோருடன் இன்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடைபெறும்.

பறக்கும் படையினர் முழுமையாக விலக்கிக்கொள்ளப்படவில்லை. ஒரு தொகுதிக்கு ஒரு பறக்கும் படை தொடர்ந்து நடவடிக்கையில் ஈடுபடும். நான்கு சட்டசபை இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் தலா 3 பறக்கும் படையும், 3 நிலை கண் காணிப்புக்குழுவும் செயல்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.