சிபிஐ இயக்குனருக்கு சுப்ரீம் கோர்ட் சம்மன்

இந்தியா

புதுடெல்லி, ஏப்.24:உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் தொடர்பாக சிபிஐ இயக்குனருக்கு உச்சநீதிமன்றம் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி உள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது அவரிடம் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் அளித்திருந்தார். இதனை ரஞ்சன் கோகாய் மறுத்தார்.

கோகாய் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்ட விஷயத்தில் சதி நடந்திருப்பதாக வழக்கறிஞர் உத்சவ் பெய்ன்ஸ் கூறியிருந்தார்.

பாலியல் புகார் குறித்து விசாரிக்க நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, என்.வி.ரமணா, இந்திரா பானர்ஜி ஆகியோரை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் குறித்து விசாரிக்கும் அருண்மிஸ்ரா, ஆர்.எப்.நாரிமண், தீபக் குப்தா ஆகிய நீதிபதிகளை கொண்ட அமர்வு, சிபிஐ இயக்குனர், நுண்ணறிவு பிரிவு தலைவர், டெல்லி போலீஸ் தலைமை இயக்குனர் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளது.

தலைமை நீதிபதி மீது பொய்யாக வழக்கு ஜோடிக்க ரூ.1.5 கோடி வரை பேரம் பேசப்பட்டதாக தெரிவித்துள்ள உத்சவ் பெய்ன்சுக்கு பாதுகாப்பு அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.