சென்னை, ஏப்.25: ஸ்ரீசீரடி சாய்பாபா கோவிலுக்கு  சென்று வருவதற்காக ஸ்ரீசீரடி செல்லும் ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் முன்பதிவு செய்த 180 பயணிகள் இன்றும் 2வது நாளாக காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

180 பயணிகளுடன் சென்னையில் இருந்து ஸ்ரீசீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்று வருவதற்காக ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் முன் பதிவு செய்திருந்தனர். அதன்படி நேற்று காலை 11.45மணிக்கு ஸ்ரீசீரடி  செல்லும் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் பயணம் செய்ய 180 பயணிகளும் சென்னை விமான நிலையத்திற்கு வந்தனர்.

ஆனால் 11.45 மணிக்கு வர வேண்டிய அந்த விமானம் பிற்பகல் 3.30மணிக்கு காலதாமதமாக வந்து செல்லும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
பின்னர் அறிவித்த நேரத்தில் விமானம் வராமல் மாலை 6 மணிக்கு வந்தது. அப்போது பயணிகள் அனைவரும் ஏறி அமர்ந்தவுடன் விமானம் புறப்பட்டது.

ஆனால் புறப்பட்ட சிறிது நேரத்தில் எந்திர கோளாறு ஏற்பட்டதால் விமானம் தரையிறக்கப்பட்டு பயணிகள் இறக்கி விடப்பட்டனர். பின்னர் விமானம் ரத்து செய்யப்பட்டதாக அறிவித்தனர்.

பயணிகள் அனைவரும் ஓடுதளத்திற்கு அருகில் அமர்ந்து வியாழக்கிழமை ஸ்ரீசீரடி சாய்பாபாவை தரிசித்து விட்டு அதே விமானத்தில் திரும்பி வருவதற்காக பதிவு செய்தோம். இப்போது நாங்கள் எப்படி செல்வது மாற்று ஏற்பாடுகள் செய்து கொடுக்கலாமே என்றும் இதற்கு விமான நிலையத்தின் அலட்சிய போக்கே காரணம் என்று கூறி மறியலில் ஈடுபட்டனர்.

இதை பார்த்த மத்திய தொழில் பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட சாய் பக்தர்களுடன் பேசியதுடன் 25ம்தேதி காலை 11.45மணிக்கு அதே விமானம் செல்லும் என்று அறிவித்தனர்.

இதனால் பயணிகள் அனைவரும் விமான நிலையத்தில் காத்து கிடக்கும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் இன்று காலை அந்த விமானம் 11.45 மணிக்கு வரவேண்டிய விமானம் அதுவும் நான்கரை மணி நேரம் தாமதமாக புறப்படும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதில் அதிர்ச்சிஅடைந்த பயணிகள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இன்றைக்காவது ஸ்ரீசீரடி சாய்பாபாவை தரிசிக்க முடியுமா? என் விமான நிலையத்தில் பயணிகள் ஏங்கி கிடக்கின்றனர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் இன்று இரண்டாவது நாளாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.