முக்கிய தீவிரவாதி குண்டு வெடிப்பில் உயிரிழப்பு:இலங்கை அதிபர் தகவல்

TOP-1 உலகம் முக்கிய செய்தி

கொழும்பு, ஏப்.26:இலங்கை வெடிகுண்டு தாக்குதலுடன் தொடர்புள்ளதாக கருதப்படும் மதகுரு ஜக்ரன் ஹசிம் உயிரிழந்துவிட்டதாக அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டபோது முக்கிய தேவாலயங்களையும், நட்சத்திர ஓட்டல்களையும் குறிவைத்து தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது.

தற்கொலைப் படையினர் நடத்திய தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் 359 பேர் உயிரிழந்தனர். 250க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இலங்கையை உலுக்கிய இந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளது. இலங்கையில் இயங்கி வரும் தவ்ஹீத் ஜமாத் எனும் அமைப்பின் உதவியுடன் ஐ.எஸ். இயக்கம் தற்கொலைப்படை தாக்குதல்களை நடத்தியது தெரியவந்தது.

தற்கொலைப்படை தீவிரவாதி களாக செயல்பட்டவர்கள் அனைவரும் நன்கு படித்த பணக்கார வீட்டு பிள்ளைகள் என்பதும் விசாரணையில் தெரியவந்து இருக்கிறது.

நியூசிலாந்தில் கிரைஸ்ட் சர்ச் எனும் இடத்தில் மசூதியில் தாக்குதல் நடத்திய ஏராளமானோர் உயிரிழக்க காரணமான சம்பவத்துக்கு பழிவாங்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இலங்கை தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக இஸ்லாமிய மதகுரு ஜக்ரன் ஹசீம் தேடப்பட்டு வந்தார். இந்த நிலையில், ஒட்டலில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மதகுரு ஜக்ரன் ஹசீம் உயிரிழந்துவிட்டதாக இலங்கை அதிபர் சிறிசேனா தெரிவித்துள்ளார்.

இலங்கை அதிபரை மேற்கோள் காட்டி செய்தி நிறுவனம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக ஜக்ரன் ஹசீம் செயல்பட்டு வந்தார் என கூறப்படுகிறது. இலங்கை குண்டு வெடிப்பு தொடர்பாக இதுவரை 70 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் அதிபர் சிறிசேனா தெரிவித்துள்ளார்.