சென்னை, ஏப்.26: சென்னை மெட்ரோ 2-வது திட்ட பணிக்காக தி.நகர் பனகல் பூங்கா உள்ளிட்ட இரு பூங்காக்களை மெட்ரோ நிர்வாகம் கையகப்படுத்த உள்ளது. மேலும் இந்த பணிக்காக 2000க்கும் அதிகமான பல்வேறு மரங்களை அகற்ற வேண்டியது இருக்கும் என்றும் மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் மெரினாவில் காந்தி சிலை அருகே மெட்ரோ டெர்மினல் சுரங்க நிலையம் அமைக்கப்பட உள்ளது.

சென்னை மெட்ரோ முதல் திட்டம் 100 சதவீதம் நிறைவேற்றப்பட்டு விட்ட நிலையில், 2-வது திட்ட பணிகள் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்பட உள்ளது.  முதல் திட்டத்தில் 2 வழித்தடங் களில் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதையடுத்து 2-வது திட்டத்தில் 118.9 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரெயில் பாதைகள் போடப்பட உள்ளது. இதில் 42.6 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுரங்க வழித்தடம் அமைக்கப்படுகிறது.

மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரை ஒரு வழித்தடமும், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரை இன்னொரு வழித்தடமும் மற்றும் மாதவரம்-சிஎம்பிடி –
சோழிங்கநல்லூர் வரை மற்றொரு வழித்தடமும் அமைக்கப்பட உள்ளது. இவை முறையே 3-வது, 4வது, 5-வது கோரிடார்கள் என அழைக்கப்படு கின்றன.
இந்த திட்டப்பணிகளுக்காக நிலம் கையகப்படுத்தும் பணி ஏற்கனவே துவங்கிவிட்டது. சுமார் 2900 நில உரிமையாளர்களுக்கு நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன. 2865 குடும் பத்தினர் மாற்று இடங்களை தேட வேண்டியது இருக்கும் என கூறப்படுகிறது.

இதனால் ஏற்படும் பாதிப்பு குறித்து டி.டி.கே.சாலை, லஸ் சர்ச் சாலை, கச்சேரி சாலை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் குடியிருப்புவாசிகள் ஏற்கனவே ஆலோசனை நடத்தி உள்ளனர்.
தி.நகர், மேற்கு மாம்பலம், புரசை வாக்கம், ஆழ்வார்பேட்டை, மயிலாப்பூர், மந்தைவெளி பகுதி வாசிகள் ஏற்கனவே நடத்தப்பட்ட கலந்தாய்வு கூட்டங்களில் தங்களது நிலங்களை கையகப்படுத்துவதற்கு ஆட்சேபம் தெரிவித்து உள்ளனர். இந்நிலையில் 2-வது கட்டப்பணி இந்த ஆண்டு இறுதியில் தொடங்கி அடுத்த 7 ஆண்டுகளில் நிறைவேற்ற திட்டமிடப்பட்டு இருப்பதாக மெட்ரோ நிர்வாகம் கூறியுள்ளது.

எந்தெந்த இடங்களில் ரெயில் நிலையங்கள் அமைக்க வேண்டும் என்பது பற்றிய ஆய்வுகள் தீவிரப் படுத்தப்பட்டு வருகின்றன. மேடவாக்கம் கூட் ரோடு பஸ் நிறுத்தம் அருகே 5-வது கோரிடாருக் காக 7104 சதுர அடி பரப்பளவு கொண்ட வனப்பகுதி நிலம் கையகப் படுத்தப்படுவதாக உள்ளது.
மேலும் தி.நகர் பனகல் பூங்கா மற்றும் இன்னொரு முக்கிய பூங்காவுக்கு அடியில் சுரங்க ரெயில் நிலையம் அமைக்கப்படும் என்பதால் இந்த பூங்காக்கள் மெட்ரோ ரெயில் பணிக்காக கையகப்படுத்தப்படும்.

ஏற்கனவே முதல் திட்ட பணிக்காக செனாய் நகரில் திரு.வி.க. பார்க் கையகப்படுத்தப்பட்டு சுமார் 400 மரங்கள் அகற்றப்பட்டன. இந்த பூங்கா இன்னும் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் 4-வது கோரிடார் பணிக்காக மெரினா கடற்கரையில் காந்தி சிலை அருகே 18 முதல் 20 மீட்டர் ஆழத்தில் சுரங்க ரெயில் நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கு கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி பெறத் தேவையில்லை என மெட்ரோ நிர்வாகம் கூறியுள்ளது.
ஆனால் கடல் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் இங்கு சுரங்க ரெயில் நிலையம் அமைப்பது சாத்தியமற்றது என மீனவர் சங்கங்கள் தெரிவித் துள்ளன.