வாரணாசி, ஏப்.26:வாரணாசி தொகுதியில் 2-வது முறையாக போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து மக்களவைக்கு கடந்த 2014-ம் ஆண்டு மோடி தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதமர் பதவியை ஏற்றார்.

இந்த முறையும் அதே தொகுதியில் போட்டியிட அவர் முடிவு செய்தார். அதன்படி நேற்று வாரணாசிக்கு சென்ற மோடி அங்கு சாலை வழியாக பிரம்மாண்டமான பேரணியில் பங்கேற்றார். சாலையின் இருமருங்கிலும் திரண்டிருந்த மக்கள் மலர்தூவி மோடியை வாழ்த்தினர்.

பின்னர் கங்கை நதிக்கு ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினார். மோடியின் பேரணியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இதன் தொடர்ச்சியாக பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று அங்கு தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது கட்சியின் மூத்த தலைவர்கள் உடனிருந்தனர்.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பாக தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களிடம் மோடி வாழ்த்து பெற்றார். அகாலிதளம் தலைவர் பிரகாஷ் சிங் பாதல் காலில் விழுந்து மோடி வாழ்த்து பெற்றார். பின்னர் அவரை பிஜேபி தலைவர் அமித்ஷா, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

மோடியின் வேட்புமனு தாக்கல் நிகழ்ச்சியில் தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அதிமுக நாடாளுமன்ற குழு தலைவர் வேணுகோபால் ஆகியோர் கலந்து கொண்டனர். வேட்புமனு தாக்கலுக்கு முன்னதாக நரேந்திர மோடி காலபைரவர் கோயிலுக்கு சென்று வழிபட்டார்.