சென்னை, ஏப்.26: தென்கிழக்கு வங்க கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஃபனி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் தாக்க கூடும் என்று ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ள தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தலைமை செயலாளர் உயர் அதிகாரியுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்தியப்பெருங்கடல் மற்றும் தென்கிழக்கு வங்க கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்று அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேலும் தீவிரமடைந்து அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக உருவெடுக்கும் என ஆய்வு மையம் கூறுகிறது.

ஃபனி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் சின்னம் காரணமாக தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.மணிக்கு 65 கி.மீ மேல் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட் டுள்ளனர்.

புயலின் வேகம் மற்றும் செல்லும் திசையை பொறுத்து மழையின் அளவு மாறுபடக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதற்கிடையே புயலை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது குறித்து தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளார்.

கடலோர பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதுடன் தேசிய பேரிடர் மீட்பு படை உள்ளிட்ட அமைப்புகளை தயார்நிலையில் வைப்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. புயல், மழையால் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் முகாம்களை ஏற்படுத்தி மக்களை அதில் தங்க வைப்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.