புதுடெல்லி, ஏப்.26:ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுக சாமி கமிஷனுக்கு உச்சநீதிமன்றம் இன்று இடைக்கால தடை விதித்தது. அப்பல்லோ மருத்துவமனை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப் பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 75 நாள் சிகிச்
சைக்குப் பிறகு 2016 டிசம்பர் 5-ல் மரணமடைந்தார். அவரது மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டதால் இது பற்றி
விசாரணை நடத்த 2017 டிசம்பரில் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது.

இந்த விசாரணை ஆணையம் அரசு அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் மற்றும் மருத்துவர்களை அழைத்து விசாரணை நடத்தி வருகிறது. 100க்கும் அதிகமானோரிடம் விசாரணை முடிவடைந்து விட்டது.

இந்நிலையில் அப்பல்லோ மருத்துவர்கள் சிலரிடம் விசாரணை நடத்த சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதை எதிர்த்து அப்பல்லோ மருத்துவ மனை சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏப்ரல் 4-ந் தேதி நீதிமன்றம் நிராகரித்துவிடடது.

இதையடுத்து அப்பல்லோ சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அப்பல்லோ மருத்துவமனை சார்பில் ஆஜரான வக்கீல் கூறுகையில், மருத்துவர்களை விசாரிக்க தனிக்குழு அமைக்க வேண்டும். மறைந்த எம்.ஜி.ஆருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றிய ஆவணங்களை கூட இப்போது கேட்கிறார்கள். இது சரியல்ல என்றார்.

இதையடுத்து ஆறுமுகச்சாமி தலைமையிலான விசாரணை ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இந்த மனுவுக்கு பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் அப்பல்லோ மருத்துவ மனையின் மருத்துவர்கள் சிலர் நேற்று விசாரணை ஆணையத் தின் முன் ஆஜராகுவதாக இருந்தது. ஆனால் யாரும் ஆஜராகவில்லை.

சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனு 26-ந் தேதி விசாரணைக்கு வருவதால் விலக்கு அளிக்க வேண்டும் என அப்பல்லோ சார்பில் ஆஜரான வக்கீல் கூறினார். இதை தொடர்ந்து இன்று மதியம் 2 மணிக்கு விசாரணை தொடங்குவதாக இருந்தது. இந்த நிலையில் உச்சநீதி மன்றம் இன்று காலை தடை விதித்து இருக்கிறது.