சென்னை, ஏப்.26:சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி மற்றும் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்படும் 3 எம்எல்ஏக்கள் உள்பட 4 பேர் மீது ஆளுங்கட்சி கொறடா புகார் அளித்துள்ளதை தொடர்ந்து, அவர்கள் மீது நடவடிக்கை பாய்கிறது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றிப் பெற்றவர்கள் நடிகர் கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு.
இதேபோல, அதிமுக எம்எல்ஏக்கள் அறந்தாங்கி ரத்தினசபாபதி, கள்ளக்குறிச்சி பிரபு, விருத்தாச்சலம் கலைச்செல்வன் ஆகியோர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார்கள். நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் தினகரன் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்தார்கள். ஆகவே, அவர்கள் கட்சிக்கு விரோத மான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தது உறுதியானது. இதனைத் தொடர்ந்து, கருணாஸ் மற்றும் தினகரன் ஆதரவு 3 எம்எல்ஏக்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி ஆளுங்கட்சி கொறடா ராஜேந்திரன், சபாநாயகர் தனபாலிடம் புகார் கொடுத்திருப்பதாக
தெரிகிறது.

அந்த புகாரை தொடர்ந்து, ‘உங்களை ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது?’ என்று விளக்கம் அளிக்கக்கோரி நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது.
தகுதி இழப்பு சட்டம் விதி 6-ன் கீழ் நடவடிக்கை எடுக்க இருப்பதாக தெரிகிறது. ஏற்கனவே, தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட தங்கதமிழ்ச்செல்வன், வெற்றிவேல் உள்பட 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். அவர்கள் கோரிக்கை நிராகரிக்கப் பட்டதை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்கள். ஆனால், சபாநாயகர் தீர்ப்பு செல்லும் என்று உச்சநீதிமன் றம் அறிவித்ததை தொடர்ந்து, 18 எம்எல்ஏக்களும் பதவியிழந்தனர்.

அவர்களின் தொகுதி வெற்றிடமாக அறிவிக்கப்பட்டு, தற்போது தேர்தலும் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.இதேபோல, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிப் பெற்ற தமிமுன் அன்சாரி திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்ததும் குறிப்பிடத்தக்கது.

ஆகவே, தமிமுன் அன்சாரி, ரத்தின சபாபதி, பிரபு, கலைச்செல்வன் ஆகிய 4 பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப சபாநாயகர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.